அந்தரங்கப் பகுதியில் வஜைனல் வாஷ், பெர்ஃபியூம் பயன்படுத்துகிற பழக்கம் தற்போது பலரிடமும் இருக்கிறது. இதன் காரணமாக வரக்கூடிய பிரச்னைகளை ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
”அவர் திருமணமான இளம்பெண். திருமணத்துக்கு முன்பிருந்தே பெண்ணுறுப்பில் அடிக்கடி இன்ஃபெக்ஷன் வருமாம். அதனால், விலை அதிகமான வஜைனல் வாஷ் மற்றும் வாசனைத் திரவியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், இன்ஃபெக்ஷன் அதிகமாகி கெட்ட வாடையுடன் வெள்ளைப்பட ஆரம்பித்திருக்கிறது. மகப்பேறு மருத்துவரை சந்தித்ததோடு, என்னையும் சந்திக்க வந்திருந்தார்.

பெண் உடம்பின் ஹார்மோன் சுரப்பு மற்றும் வியர்வை சுரப்புக்கெல்லாம் தனி வாசனை உண்டு. அந்த வாசனை ஆணை ஈர்க்கும். ஆண் விலங்குகள் இப்போதும்தான் இப்படித்தான் இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்தெல்லாம் வெகுதூரம் தள்ளி வந்துவிட்டோம். இயல்பான வாடையை வாஷ், வாசனைத்திரவியங்கள் மூலம் அப்புறப்படுத்த ஆரம்பித்து, இப்போது நம்முடைய வாடை நமக்கே பிடிக்காமல் போய்விட்டது.
அந்தப் பெண், வஜைனல் வாஷ் ஆரோக்கியமானது; நம்முடைய இன்ஃபெக்ஷனை சரி செய்யும் என்று நம்பி பயன்படுத்தியிருக்கிறார். பெண்களுக்கு வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை பிறப்புறுப்பில் இன்ஃபெக்ஷன் வருவது இயல்பான ஒன்றுதான். அதிலும் தாம்பத்திய உறவுகொள்ளும் பெண்களுக்கு இன்ஃபெக்ஷன் வருவது இன்னமும் இயல்பான விஷயம்தான். இதில் வெட்கப்படுவதற்கும், மறைப்பதற்கும் தேவையே இல்லை. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்த தவறே அதுதான். மருத்துவரை அணுகி, இன்ஃபெக்ஷனுக்கான காரணத்தைக் கண்டறிந்து, முறையான சிகிச்சை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், வாஷ், வாசனைத்திரவியம் என மேலோட்டமான தீர்வை நாடியிருக்கிறார். விளைவு, அவற்றிலிருக்கிற ரசாயனங்கள் பெண்ணுறுப்பில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்களை கொன்றுவிட்டன. அந்த நல்ல பாக்டீரியாக்களும், அங்கு இயற்கையாக இருக்கிற அமிலத்தன்மையும்தான் பெண்ணுறுப்பில் தீவிரமான தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். அவற்றையே நீக்கிவிட்டதால், அங்கு புதிதான கிருமிகள் வந்து, இன்ஃபெக்ஷன் அதிகமாகி கெட்ட வாடையுடன் வெள்ளைப்பட ஆரம்பித்திருக்கிறது. லேசான வெள்ளைப்படுதல் நார்மல். ஆனால், கெட்ட வாடை மற்றும் அரிப்புடன் வருவது இயல்பானது கிடையாது. முறையான சிகிச்சையெடுக்காமல் இருந்தால், இன்ஃபெக்ஷன் மேலேறி கருக்குழாய் வரைக்கும் பாதித்து, குழந்தையில்லாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதை பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ் (Pelvic inflammatory disease) என்போம். நல்லவேளை, அந்தப் பெண்ணுடைய விஷயத்தில் பிரச்னை அந்தளவுக்கு பெரிதாகவில்லை. அதற்குள் முறையான சிகிச்சையெடுக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்தப் பெண்ணுக்கு இன்ஃபெக்ஷன் வந்ததற்கான ஆரம்ப காரணம் என்ன தெரியுமா..? அவர் எப்போதுமே நைலான் உள்ளாடைகள்தான் அணிவாராம். இரவு நேரங்களிலும் இதே உள்ளாடையுடன் தூங்குகிற பழக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. எந்நேரமும் காற்றோட்டமில்லாத, ஈரத்தைக் காயவிடாத நைலான் உள்ளாடையை அணிந்தால், இன்ஃபெக்ஷன் வரத்தான் செய்யும். காற்றோட்டமான உள்ளாடைகளை அணியுங்கள். தேவையற்ற கெமிக்கல்களை அந்த இடத்தில் பயன்படுத்தாதீர்கள். எல்லாவற்றுக்கும் மேல், பெண்ணுறுப்பில் இன்ஃபெக்ஷன் வந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.