குழந்தைகளையும் பட்டாசையும் பிரிக்க முடியாது. முதல்முறை பட்டாசு வெடிக்கும்போது பயப்படும் குழந்தைகளும் சில மணி நேரத்தில் பட்டாசுப் பிரியர்களாக மாறிவிடுவார்கள். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக கண்களில் ஏற்படும் காயங்கள்… பட்டாசு வெடிக்கும்போது கண்களில் பட்டு காயம் ஏற்பட்டால் அதை எப்படி அணுக வேண்டும், எத்தகைய முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

”வேறெந்த நாள்களைவிடவும், தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசு வெடிப்பதால் கண்களில் காயம் ஏற்பட்டு, மருத்துவரை அணுகுவோர் அதிகம். வெடி வெடித்து கை, கால்களில் அடிபடுவதற்கு இணையாக, கண்களிலும் காயம் பட்டு பாதிக்கப்படுவோரைப் பார்க்கிறோம்.
தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, வெடிப்பவர்களுக்குப் பக்கத்தில் இருப்பவர்களின் கண்களையும் பதம் பார்க்கக்கூடியவை பட்டாசுகள். கண்களுக்குள் பட்டாசுத்துகள் பட்டுவிட்டால் கண்களைத் தேய்க்கவே கூடாது. கண்களை உடனடியாக குளிர்ந்த நீரால் மிக மென்மையாகக் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் கண்களுக்குள் விழுந்த மத்தாப்புத்துகள், பட்டாசுத்துண்டுகள் போன்றவை வெளியேறிவிடும். கண்களைக் கழுவிவிட்டோமே, சரியாகிவிடும் என அப்படியே விட்டுவிடாமல், கண் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியதும் அவசியம். அப்போதுதான் கண்களில் பட்டாசுகளால் ரசாயன ரியாக்ஷன் ஏற்பட்டு, பாதிப்பு பெரிதாகாமல் தடுக்கப்படும்.

கண்களில் பிளவு இருப்பது போலத் தெரிந்தால், அவர்கள் கண்களைக் கழுவுவதைத் தவிர்த்து, சற்றும் தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகுவதுதான் பாதுகாப்பானது. கண்களில் பிளவு ஏற்பட்ட நிலையில், கண்களைக் கழுவினால், அந்தத் தண்ணீர் கண்களுக்குள் போய், ‘எண்டோதால்மிட்டிஸ் ‘ (Endophthalmitis) என்ற பிரச்னையை ஏற்படுத்தலாம். கண்களின் உள் பகுதியில் ஏற்படும் ஒருவகை வீக்கம் இது. கண்களில் வலி, சிவந்துபோவது, இமைகளில் வீக்கம் மற்றும் பார்வை மங்குதல் என பல பிரச்னைகளுக்கு அது காரணமாகலாம்.
கண்களில் பட்டாசு அல்லது வெடி பட்டு பிளவு ஏற்பட்ட நிலையில், மருத்துவரை அணுகும்வரை கண்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் பாதுகாப்பானது. கண்களைச் சுற்றி துணியோ, பேண்டேஜோ கட்டக்கூடாது. கைகளைக் கழுவிய பிறகு, கைகளாலேயே கண்களைக் குவித்து மூடியபடி மருத்துவரிடம் செல்ல வேண்டும். கண்களில் எண்ணெய், ஐ டிராப்ஸ், ஆயின்மென்ட் என எதையும் உபயோகிக்கக்கூடாது. மருத்துவர் பார்த்துவிட்டு, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், பட்டாசு வெடிக்கும்போது அவற்றைக் கழற்றிவிட்டு, கண்ணாடி அணிந்துகொள்ளலாம்.
வெடிகளைக் கொளுத்தும்போது குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளி இருக்கும்படி நின்றுகொண்டு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்து முடித்ததும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பட்டாசுகளைத் தொட்ட கையால் கண்களைத் தொட வேண்டாம்.
வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்கவைக்கும் முயற்சியில் முகத்தை வெடிக்கு அருகில் கொண்டுசெல்வதைத் தவிர்க்க வேண்டும். திடீரென வெடித்தாலோ, புகைந்தாலோ அது கண்களில் பட்டு காயத்தை ஏற்படுத்தலாம்.
மொத்தத்தில் கண்களுக்கு கண்ணாடி, நீளமான ஊதுவத்தி பயன்படுத்துவது, இடைவெளி விட்டு நிற்பது, வெடிகளைக் கையில் கொளுத்தி விளையாடுவதைத் தவிர்ப்பது போன்றவற்றைப் பின்பற்றினால், தீபாவளி பண்டிகை பாதுகாப்பாகவும், நிஜமான கொண்டாட்டமாகவும் இருக்கும்” என்கிறார் கண் மருத்துவர் வசுமதி.
– ராஜலட்சுமி