Doctor Vikatan: என் மகளுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக வருவதில்லை. கடந்த ஒரு வருடமாக ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆனாலும், பலனில்லை. அவளுக்கு மிகச் சரியாக என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவளின் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த ஏதேனும் வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் அ. முகமது சலீம்.

உங்கள் மகளின் முறையற்ற மாதவிலக்கு சுழற்சி, ஒரு வருடம் ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பிறகும், ஒழுங்கு பெறவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். இந்திய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் 12% முதல் 35 சதவிகித வளரிளம் பெண்களுக்கு மாதவிலக்கில் ஒழுங்கின்மை காணப்படுவது தெரிய வந்துள்ளது.
28 முதல் 35 நாள்களில் வர வேண்டிய மாதவிடாய் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பல மாதங்கள் வராமல் இருப்பதால் பல பெண்கள் சிரமப்படுகிறார்கள். ஒரு மாதவிலக்கில் 20 மில்லி முதல் 60 மில்லி வரை ரத்த இழப்பு இருப்பது பொதுவானது. ஆயுர்வேதத்தில் முறையற்ற மாதவிலக்கை `ஆர்த்த துஷ்டி’ என்பார்கள்.

முறையற்ற மாதவிலக்கு சுழற்சிக்கான காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும். ரத்தச்சோகை, இரும்புச்சத்து குறைபாடு, ஹார்மோன்கள் சமநிலை இன்மை இருக்கின்றனவா எனக் கண்டுபிடிக்க வேண்டும். முறையற்ற உணவுப்பழக்கம், வாழக்கை முறை மாற்றம், அதீத மன அழுத்தம், இரவில் நீண்டநேரம் கண் விழித்தல், அஜீரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு போலவே அதீத ஊட்டச்சத்து உள்ள நிலை, ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதில் பிரச்னை, குடலில் கசிவு, விஷேச நாள்களுக்காக மாதவிலக்கைத் தள்ளிப்போடும் ஹார்மோன் மாத்திரைகளை எடுப்பது, மருத்துவர் மேற்பார்வை இல்லாமல் 21 நாள்கள் ஹார்மோன் மாத சுழற்சி மாத்திரைகளை எடுப்பது, மாதவிடாய் வருவதற்கு மாத்திரை, ரத்தப்போக்கு அதிகமாகப் போனால் அதை நிறுத்த மருந்துகள் எடுப்பது போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
சிறுநீர், தண்ணீர் தாகம் உட்பட 13 வகை இயற்கை வேகங்களை அடக்குவது, உடல் தன்மை தெரியாமல் சோற்றுக் கற்றாழை ஜூஸ் , கழற்சிக்காய் போன்ற மருந்துகளை எடுப்பது, மருத்துவர் மேற்பார்வை இன்றி நாட்டு மருந்துகளை எடுப்பது என்று இந்தப் பிரச்னைக்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையைக் கண்டுபிடிக்க வயிற்றுப் பகுதிக்கான அல்ட்ராசவுண்ட் பரிசோதனை, ஹார்மோன் ரத்தப் பரிசோதனைகளில் AMH, தைராய்டு ஆன்டிபாடி பரிசோதனை, T3, T4, TSH, FSH,LH, புரொலாக்டின், வைட்டமின்-டி பரிசோதனைகள், ரத்தச் சோகையைக் கண்டுபிடிக்க CBC, Iron Profile, ஆயுர்வேத முறையில் தேக பிரகிருதி, நோய் விக்ருதி பரிசோதனை, மூத்திர பிந்து, நாடி பரிசோதனைகள், குடல் பரிசோதனை, குளுட்டன் சென்சிட்டிவிட்டி உள்ளதா என்பதற்கான பரிசோதனை போன்றவை தேவைப்படலாம்.
மாத விலக்கை ஒழுங்கு செய்வதில் உணவுமுறைக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதன்படி மாதவிடாயின் முதல் நாள் முதல் 5-வது நாள்வரை எள் உருண்டை எடுத்துக்கொள்ளலாம். எள்ளில் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜென், பெண்களின் மாதவிடாய்க்கால பிரச்னைகளைத் தீர்க்கும். மாதவிடாய் ஏற்பட்ட ஆறு முதல் 14 நாள்வரை உளுந்தங்களி சாப்பிடக் கொடுக்கலாம். இது மாதவிடாய் நாள்களில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.
மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாள் முதல் 28-வது நாள்வரை வெந்தயக் கஞ்சி கொடுக்கலாம். இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் கோளாறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகளை சரியான தடிமனில் பராமரிப்பதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மாத விலக்கு முடிந்த உடனே, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தல். சரியான உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவுமுறையைக் கடைப்பிடிப்பது போன்றவை அவசியம். ஹார்மோன்கள் சமநிலையில் இருப்பதற்கு சுகுமார, தான்வந்தரம், கனா சதாக்வாதி, குலத்தாதீ கஷாயம், சுகுமார லேகியம், அசோக அதிர்ஷ்டம், ரஜ பிரவர்த்தினி வடி எனப் பல மருந்துகளைப் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம். மேலும் இதில் தைராய்டு, பிசிஓடி போன்ற பிரச்னைகளுக்கு காஞ்சனார குகுளு, வாரணாதி கஷாயம் எனப் பல மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரில் இவற்றை எடுத்துக்கொள்வது உங்கள் மகளின் பிரச்னையைப் போக்கும். அனுபவும் உள்ள BAMS, MD (Ayurveda ), MS (Ayurveda OG ) படித்த மருத்துவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை எடுக்கலாம். ஆன்லைன் ஆலோசனையும் பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.