உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கு எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கி.வெங்கடராமன் எழுதிய “செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு தமிழர் கிராமங்கள் அழிப்பு’ என்ற நூல் திறனாய்வு விளக்கக் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
மகளிர் ஆயம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மகளிர் ஆயம் தலைவர் அருணா, துணைத்தலைவர் க.செம்மலர், பொதுச்செயலாளர் மு.செந்தமிழ்ச்செல்வி, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம் ), தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் மற்றும் சில உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கருத்தரங்கில் மகளிர் ஆயம் பொதுச் செயலாளர், மு.செந்தமிழ்ச் செல்வி பேசியதாவது, “பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய, பொது விநியோக அமைப்பு (பி.டி.எஸ்) மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி (போர்டிபைடு அரிசி) என்பது செயற்கையாக சத்து கூட்டப்பட்ட அரிசியாகும். இந்த அரிசியில் போலிக் அமிலம், இரும்புச்சத்து , வைட்டமின் பி-12 போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இந்த மூன்று சத்து குறைபாடும் இந்தியாவில் பரவலாக இருப்பதால்தான் செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டு வரப்பட்டுள்ளது என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) 2018-ல் அறிவித்தது. சத்துக் குறைபாடு உள்ளவர்கள் மட்டும் இந்த அரிசியை பயன்படுத்தலாம் என்ற விதிமுறையையும் கூறியது. இந்த திட்டத்தை செயல்படுத்த முன்னோட்டமாக திருச்சி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது.