உங்களைப் போல நிறைய பேர், `நான் கேழ்வரகுதான் டாக்டர் சாப்பிடறேன்… ஆனாலும் சுகர் குறைய மாட்டேங்குது” என்பார்கள். ‘எப்படி சாப்பிடறீங்க’ என்று கேட்டால் கஞ்சியாக சாப்பிடுவதாகச் சொல்வார்கள். அதுதான் தவறு. சிறுதானியங்களை அப்படியே சோறு போல சமைத்து சாம்பார், ரசம், காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ரவை போல உடைத்து உப்புமா, கிச்சடி போல செய்து சாப்பிடலாம். கோதுமையில் செய்யப்படுகிற சப்பாத்தி, தோசையிலும் சரி, அரிசி சாதத்திலும் சரி ஒரே அளவிலான சர்க்கரைதான் இருக்கும். எனவே நார்ச்சத்துள்ள தானியங்கள்தான் சர்க்கரைநோயாளிகளுக்குச் சிறந்தவை.
அந்த வகையில் பச்சரிசியில் நார்ச்சத்து மிக மிக குறைவு. புழுங்கல் அரிசியில் நார்ச்சத்து ஓரளவு அதிகம். பாரம்பர்ய அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி போன்றவற்றில் இன்னும் அதிகம். அதற்காக ஒரு கப் கறுப்பு கவுனி அல்லது மாப்பிள்ளை சம்பா அரிசி சாதத்துக்கு பதில் இரண்டு கப் சாப்பிடுவதும் தவறு. அரிசியின் அளவும் முக்கியம், அது என்ன அரிசி என்பதும் முக்கியம். அதற்கேற்ப உங்கள் உணவுத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.