நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு ஆரோக்கியத்தின் சுரங்கமாகக் கருதப்படுகிறது. எடையைக் குறைக்கவும், சிறுநீரகக் கற்களின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கவும் வாழைத்தண்டு கைகொடுக்கும். பொரியலைத் தவிர வாழைத்தண்டில் வேறென்ன செய்ய முடியும் என்று கேட்பவர்கள், வாழைத்தண்டில் விதம் விதமாகச் சமைத்து வீக் எண்டை கொண்டாட இதோ சில ரெசிப்பீஸ்….
வாழைத்தண்டு ரசம்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 3 பற்கள்
ரசப்பொடி – சிறிதளவு
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கொத்தமல்லி நறுக்கியது – சிறிதளவு
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
நெய், கடுகு, சீரகம் – தேவையான அளவு

செய்முறை:
வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், தக்காளி, பூண்டு இந்த மூன்றையும் தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து வாழைத்தண்டு சாற்றுடன் கலக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், ரசப்பொடி சேர்த்துக் கலந்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, சீரகம் தாளிக்கவும். பின்னர் வாழைத்தண்டு கலவையை இதில் சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
வாழைத்தண்டு ஸ்நாக்ஸ்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று
கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் – கால் டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு துண்டு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
வாழைத்தண்டைச் சுத்தம் செய்து சின்னச் சின்னத் துண்டாக வெட்டி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் எள், ஓமம், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்னர் அதனுடன் தயாரித்துவைத்துள்ள வாழைத்தண்டு சாறு சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். பின்னர் இதனை கத்தி கொண்டு கோடுகள் போட்டு உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். பின்னர் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். டேஸ்ட்டி வாழைத்தண்டு ஸ்நாக்ஸ் ரெடி.
வாழைத்தண்டுப் பொங்கல்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பயத்தம்பருப்பு – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
அரிசி – கால் கிலோ
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
தண்ணீர் – 4 கப்
உப்பு, மஞ்சள்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை:
ஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வதக்கிக்கொள்ளவும். அதனுடன் அரிசி, பயத்தம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பிறகு ஒரு கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து முந்திரி போட்டு வேகவைத்துள்ள சாதத்தில் சேர்த்துக் கிளறினால் வாழைத்தண்டுப் பொங்கல் தயார்.

வாழைத்தண்டு மோர்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒன்று (நறுக்கவும்)
கட்டித் தயிர் – ஒரு கப்
தண்ணீர் – அரை டம்ளர்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
நறுக்கிய வாழைத்தண்டு, கட்டித்தயிர், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி உப்பு சேர்த்தால் வாழைத்தண்டு மோர் தயார்.