கேரள மாநிலத்தில் கர்ப்பிணிகளுக்கு எனப் பிரத்யேகமாக “கனிவு 108′ என்ற ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பினராயி விஜயன் கடந்த முறை முதல்வராக இருந்தபோது இந்த ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் தாய், சேய் பராமரிப்புக்குப் பயிற்சிபெற்ற செவிலியர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
சில நேரங்களில் எதிர்பாரா விதமாக வீடுகளில் பிரசவம் நடந்தாலும் கனிவு 108 அம்புலன்ஸ் சேவை மூலம் உதவி விரைந்து கிடைக்கிறது. இந்த ஆம்புலன்ஸ்களிலும் பல பிரசவங்கள் நடந்துள்ளன். வழக்கமான அம்புலன்ஸ் போன்றே 108 என்ற எண்ணை தொடர்புகொண்டு ‘கனிவு 108’ சேவையை பெற முடியும். இதன் மூலம் நேரம் சற்று அதிகமாக ஆவதாக கூறப்பட்டது. மேலும், தனிமையில் இருக்கும் சில கர்ப்பிணிகள் இக்கட்டான நிலையில் ஆம்புலம்ஸுக்கு போனில் ரூட் சொல்வதில் சிரமம் ஏற்படும் நிலையும் இருந்துவருகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கனிவு 108 ஆம்புலன்ஸ் சேவையை எளிதாக்க அதற்கு மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்த கேரள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. புதிய மொபைல் ஆப்பை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கனிவு 108 ஆம்புலன்ஸ் சேவையை இன்னும் எளிமையாகப் பயன்படுத்தும் விதமாக மொபைல் அப்ளிகேஷன் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 108 என்ற எண்ணை டயல் செய்யாமல் ஆப் மூலம் சேவையை பெற முடியும். மொபைலில் உள்ள ஜி.பி.எஸ் உதவியுடன் சம்பந்தப்பட்டவர் இருக்கும் இடம் குறித்த விவரங்களை மிக எளிதாகக் கண்டறிந்து ஆம்புலன்ஸ் அந்த இடத்துக்கு விரைந்து செல்ல வசதியாக அமையும். இதன் மூலம் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும். இந்த மாதம் மொபைல் ஆப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.