Doctor Vikatan: தினமும் காலையில் அவதி தரும் கணுக்கால் தசைப்பிடிப்பு… என்ன செய்ய வேண்டும்?

Share

Doctor Vikatan: காலை வேளையில் படுக்கையில் இருந்து எழும்போது கணுக்கால் தசைகள் பிடித்துக்கொள்கின்றன. கால்களை அசைக்க முடியாமல் சிரமப்படுகிறேன். சிறிது நேரத்தில் வலி குறைந்துவிடுகிறது. காரணம் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

டாக்டர். அருணாச்சலம்

கணுக்கால் தசைகள் பிடித்துக்கொள்ளும் இந்தப் பிரச்னைக்கு கால்களில் ரத்த ஓட்டம் குறைவதுதான் பொதுவான காரணமாக இருக்கும். இரவு நேரங்களில் இதுபோல தசைப்பிடிப்பு ஏற்பட, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது முககிய காரணமாக இருக்கலாம். அதாவது பகல் வேளையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு அதன் விளைவாக இரவில் இதுபோன்ற தசைப்பிடிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கால் தசைகளின் இயக்கம் மற்றும் அசைவுக்கு அவசியமான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் போன்றவை போதுமான அளவு இல்லாமல் இருந்தாலும் தசைப்பிடிப்பு வரும். அதேபோல அதீத உடற்பயிற்சி, உடலுழைப்பு, அதிலும் குறிப்பாக வெயிலில் நீண்ட நேரம் கடுமையாக உழைப்பது போன்றவற்றாலும் கால்களில் தசைப்பிடிப்பு வரலாம்.

அதீத உடற்பயிற்சி கூட காரணமாக இருக்கலாம்!

உடலுழைப்பே இல்லாதவர்களுக்கும் தசைப்பிடிப்பு வரலாம். கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை சகஜமாக வருவதைப் பார்க்கலாம். முதுமையும் ஒரு காரணம். இவை தவிர வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும்.

மற்றபடி  பகல் வேளையில் நிறைய தண்ணீர் குடிப்பது, நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவது, தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் தசைப்பிடிப்பு வராமல் பார்த்துக்கொள்ளலாம்.  இப்படியெல்லாம் செய்தும் பிரச்னை குறையவில்லை என்றால் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுங்கள். வைட்டமின் உள்ளிட்ட சத்துக் குறைபாடு இருக்கிறதா என பார்த்து அதற்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com