சமீப நாள்களாக டெங்கு பாதிப்பு பெரிதும் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் இருப்பதாக, வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது… டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகள் என்ன?
இது குறித்து, சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் விஷாலிடம் பேசினோம்… “டெங்கு பரவ முக்கிய காரணம் கொசு. டெங்கு பரப்பும் கொசு வகைகளால் அதிக உயரம் பறக்க முடியாது. அதற்காக, இவை முட்டி வரை மட்டுமே கடிக்கும் என்பதில்லை. இவ்வகை கொசுக்கள் எல்லா வயதினரையும் கடிக்கும். டெங்கு வந்த பின்பு, அதிகளவில் காரமுள்ள உணவுகளைக் குறைப்பது நல்லது.

இந்தச் சமயத்தில் நீர்ச்சத்து அதிகம் தேவை என்பதால் அதிகமாக தண்ணீர், இளநீர் மற்றும் பழச்சாறு குடிப்பது நல்லது. இதர நோய்கள் இருக்கும் நபர்கள், குறிப்பாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை.
டெங்கு வராமல் இருக்க சுகாதாரமான இடம் மிக முக்கியம். டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள பிரத்யேகமான உணவுமுறை என்று ஒன்றுமில்லை. முழுக்க முழுக்க கொசுவினால் மட்டுமே இது பரவுவதால், அதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொசு கடிக்காமல் இருக்கும் களிம்பு உபயோகிப்பது மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
டெங்கு குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: டெங்கு வராமல் தடுக்க பாதங்களில் தேங்காய் எண்ணெய் தேய்க்கச் சொல்லி தற்போது பரவிவரும் சமூகவலைத்தளத் தகவல் பொய்யானது. டெங்கு கொசு உடலின் எந்த பாகத்திலும் கடிக்கும். தேங்காய் எண்ணெய் தேய்ப்பதனால் அந்த வாசனைக்கு வேண்டுமானால் கடிக்காமல் இருக்குமேயன்றி, அதுவே நிரந்தர தீர்வு இல்லை. ஆனால் தேங்காய் எண்ணெயில் சிறிது திருநீற்றுப் பச்சிலை, கற்பூரவள்ளி, துளசி போன்றவற்றைச் சேர்த்து “ஸ்பிரே” போல உபயோகப்படுத்தலாம்.

டெங்கு ஆரம்ப நிலையில் சித்த மருத்துவ அடிப்படையில் நிலவேம்புக் குடிநீர், மலைவேம்புச் சாறு, பப்பாளிச் சாறு போன்ற சாற்றினை 10 மில்லி குடிக்கலாம். மேலும் அமுக்குராச்சூரணம், ஆடாதோடா இலைச்சாறு போன்றவையும் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படுகின்றன. டெங்குவை பொறுத்தவரை அதன் அறிகுறிகள் மாறி மாறி தோன்றுவதால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. ஐந்து நாள்களுக்கு இரண்டு வேளை நிலவேம்புக் குடிநீர் எடுப்பது நல்லது. இது ஒரு தடுப்பு மருந்தாகச் செயல்பட்டு நோய்எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
உணவுமுறை என்று வரும்போது சூடானவற்றை உண்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செரிமானம் நல்ல முறையில் நடந்தாலே பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய் சாறு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

டெங்கு வந்தபின் உடல் மிகுந்து சோர்வுற்றுக் காணப்படும். அந்த நேரங்களில் சாத்துக்குடி ஜூஸ் அல்லது மற்ற ஜூஸ்களை குடிப்பது மிகுந்த நன்மை பயக்கும். குறிப்பாக ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் காய்கறி சூப்பில் மிளகு சேர்த்து குடித்து வரலாம். கஞ்சி வகைகளை அதிகமாக எடுக்கலாம்” என்று சித்த மருத்துவர் விக்ரம் குமார் கூறினார்.