காதலும் காமமும் இயற்கையான உணர்வுகள்… இந்த உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் வயதுகளில் அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதே சரி. இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வாழ்பவர்கள், அந்த உணர்வுகளை வெளிப்படுத்த வழி கிடைக்கையில் வேகவேகமாக இயங்கி, அதன் காரணமாக பிரச்னையில் சிக்கிக் கொள்வார்கள். இப்படிப்பட்டதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான் இன்று நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

“அந்த ஆணுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும். அதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆணுறுப்பு உடைந்து, அதனுள்ளேயே ரத்தம் தேங்கிய ஆபத்தான நிலையில் என்னை சந்திக்க வந்திருந்தார். இதை, மருத்துவர்கள் செக்ஸுவல் எமர்ஜென்சி என்று சொல்வோம். ஆணுறுப்புக்குள்ளே எக்கச்சக்க ரத்தக்குழாய்கள் இருக்கும். உறவின்போது, அவை அத்தனைக்குள்ளும் ரத்தம் பாயும். இதனால்தான், அந்த நேரத்தில் ஆணுறுப்பானது விறைத்து எலும்புபோல இருக்கும்.
இந்த நேரத்தில் அவசர அவசரமாக உறவுகொண்டாலோ அல்லது ஆண் கீழே, பெண் மேலே இருந்து உறவுகொண்டாலோ சில நேரங்களில் ஆணுறுப்பானது உடையலாம். பெண் உடல் பருமனாக இருந்தால், இப்படி நிகழ்வதற்கு அதிகமாக வாய்ப்பிருக்கிறது. நான் குறிப்பிட்ட அந்த நபரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் என்னைச் சந்தித்தார். உடனடியாக ஓர் அறுவை சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றினேன்” என்றவர், தொடர்ந்து பேசினார்.
“ஆணுறுப்பு உடையும் என்று பெரும்பாலான ஆண்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு இந்தப் பிரச்னை எங்கோ சில ஆண்களுக்கு மட்டுமே நிகழும். ஆனால், சமீப காலமாக இந்தப் பிரச்னையுடன் என்னைச் சந்திக்க வருகிற ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள்…
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த பாதிப்புடன் வருகிற ஆண்களில் பலர் சினிமாவில் உதவி இயக்குநர்களாக வேலை பார்ப்பவர்கள். அவர்களை குற்றம் சுமத்தும் தொனியில் இதை நான் சொல்லவில்லை. இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வாழ்கிற அவர்களுடைய பரிதாப நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்லவே இதை வெளிப்படுத்துகிறேன்.
ஒரு படம் செய்தால்தான் திருமணம் என்று வாழ்கிறார்கள். இதோ இந்த வருடம் படம் இயக்கிவிடலாம், அடுத்த வருடம் இயக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ‘சரி திருமணம் செஞ்சுக்கலாம்’ என்று அவர்கள் முடிவெடுக்கையில் நாற்பதை நெருங்கி விடுகிறார்கள். அல்லது தங்கள் உணர்வுக்கு வடிகாலை வெளியே தேடியபடி, திருமணம் செய்துகொள்ளாமலேகூட இருந்து விடுகிறார்கள்.
பல வருடங்களாக காம உணர்வை அடக்கி அடக்கி வாழ்கிற இவர்கள், என்றோ ஒருநாள் அதை வேகமாக வெளிப்படுத்துகையில் ஆணுறுப்பு உடையலாம். ‘பருவத்தே பயிர் செய்’ என்பது காமத்துக்கும் பொருந்தும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.