பிரட் என்பது நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருளாக மாறியுள்ளது. நோயாளிகள் முதல் வேலைக்கு செல்பவர்களின் காலை உணவு என அனைத்து இடங்களையும் இந்த பிரட் ஆக்கிரமித்துள்ளது. குழந்தைகளுக்கும் இது ஜாம் போன்றவைகளுடன் சுவைக்கக் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் சத்துகள் உள்ளதா என்று கேட்டால்? இல்லை என்ற பதிலே முதலில் வரும். ‘அப்ப ஏன் பிரட் கொடுக்குறீங்க’ என்று வினவினால், வெள்ளை பிரட் தான் மோசம்; நாங்க பயன்படுத்துவது பிரவுன் பிரட் என்று கூறுவார்கள்.
மேலும், இது 100% விழுக்காடு கோதுமை தான் உள்ளது என்றும் சொல்வார்கள். இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும் பிரட் ‘மைதா’ மாவு கொண்டு உருவாக்கப்படுவதாகவும், பிரவுன் நிறத்தில் இருப்பது ‘கோதுமை’ கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் நம்பப்பட்டது. ஆனால், இந்த வைரல் வீடியோ அனைத்தையும் போட்டு உடைத்து பிரவுன் பிரட்டின் முகத்திரையைக் கிழித்துள்ளது.

அதாவது பிரவுன் பிரட் எப்படி உருவாக்கப்படுகிறது என்பது குறித்த விளக்கப் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் பார்வையாளர்களை திணறடிக்கும் விதமாக கலவை தயார் செய்யப்பட்டுள்ளது. மைதா மாவில் பிரவுன் நிறத்தைக் கொண்டு வர ‘கேரமல் நிறச்சாயம்’ சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக அது முற்றிலும் கோதுமையில் தயார் செய்யப்பட்ட பிரட் போல காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் வியாபார நோக்கில் அதிகளவு தயாரிக்கப்படும் பிரவுன் பிரட்களில் உண்மையிலேயே நிறுவனங்கள் தெரிவித்தபடி கோதுமை இருப்பதில்லை. அவை உண்மையான கோதுமை பிரட் கிடையாது என்று கூறியுள்ளார். இதற்காக நீங்கள் இவற்றை மட்டும் செய்தால் போதுமானது.
நமக்குத் தேவையான பிரவுன் பிரட் வகைகளை நாமே வீட்டில் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டியதில்லை. சரியான முறையில் செய்தால் பிரட் கடைகளில் இருந்து வாங்குவதை போன்று இருக்கும். ஆனால், ஒன்று மட்டும் நாம் வீட்டில் செய்யும் பிரட்டில் இருக்காது. நஞ்சு! இது இல்லை என்றால் உணவும் மருந்து தானே.
அடுத்ததாக, கடைகளில் இருந்து பிரட் வாங்கும்போது, அதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பதை ‘Ingredients’ தலைப்பின் கீழ் பார்க்கவேண்டும். அப்போது எவ்வளவு கோதுமை சேர்க்கப்பட்டுள்ளது, நிறச்சாயங்கள் அளவு என்ன, கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் அளவு என்ன என்றெல்லாம் அலசி ஆராய வேண்டும். அப்படி அதன் அளவுகள் மோசமான நிலையில் இருந்தால், அந்த பிரட்டை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது.
எப்போதும் அருகில் இருக்கும் சில்லறை விற்பனை இனிப்பகங்களில் பிரட்டை வாங்குவது நல்லது. இது அதன் தரத்தை உறுதி செய்ய நமக்கு எளிதாக இருக்கும். மேலும் பல வகைகளிலான தானியங்கள் கலந்த பிரட்டை பயன்படுத்துவது நல்லது. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் பிரட் என்பது அனைவரும் பயன்படுத்தும் உணவாக இருந்ததில்லை. ஆனால் இப்போது நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார் ரேவண்ட் ஹிமட்சிங்கா எனும் எக்ஸ் யூசர் . இந்தியாவில் விற்கப்படும் பிரவுன் பிரட்கள் உடலுக்கு நல்லதல்ல என்று கூறும் அவர், இதில் கேரமல் நிறம் 150A எனும் சாயம் சேர்க்கப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.