Doctor Vikatan: எங்கள் வீட்டில் தென்னை மரம் உள்ளது. அதில் இருந்து கிடைக்கும் தேங்காயிலிருந்து நாங்கள் தேங்காய் எண்ணெய் ஆட்டிக் கொள்கிறோம். அதே தேங்காய் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாமா… தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்குமா?
a gomathi, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்.
கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலிலிருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது. இப்படி எடுக்கப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்தில் மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் ட்ரைகிளிசரைடு வகை கொழுப்பானது எளிதில் உடலால் உட்கிரகிக்கப்படும்.
அது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமோ என பயப்பட வேண்டாம். வீட்டிலேயே தேங்காயை ஆட்டி நீங்களே தயாரிக்கும் இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்துச் சமைப்பதோ, பொரிக்கப் பயன்படுத்துவதோ கூடாது.