கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது, இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை மெள்ள அதிகரித்து வருகிறது. அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், மத வழிப்பாட்டு தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலாத்தளங்கள் என அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன.
2018-ம் ஆண்டைப் போலவே வைரஸ் எங்கிருந்து பரவியது, அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரள சுகாதாரத் துறை.

இந்நிலையில் கோவிட் தொற்றின் இறப்பு விகிதத்தை விட நிபாவின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பாஹ்ல் கூறியுள்ளார்.
நிபா பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தென் மாநிலமான கேரளாவில் கொடிய வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கோவிட் இறப்பு விகிதம் 2 முதல் 3 சதவிகிதம் வரை இருந்தது ஆனால் நிபா இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவிகிதம் வரை உள்ளது.
தொடர்ந்து நிபா தொற்றுகள் எப்படி வெளிவருகின்றன என்று எங்களுக்குத் தெரியவில்லை. 2018-ம் ஆண்டில் கேரளாவில் நிபா பரவியபோது அது வௌவால்களுடன் தொடர்புடையது என கண்டறிந்தோம். வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு எப்படி வைரஸ் பரவியது என்பது பற்றியும் எங்களுக்குத் தெரியவில்லை.
அதற்கான தொடர்பை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் இப்போது பரவி வரும் வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுப்பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். இந்த வைரஸ் எப்போதும் மழைக்காலத்தில் பரவும் என்பது மட்டும் தெரிகிறது.

2018-ல் நிபா சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சில டோஸ் மோனோகுளோனல் ஆன்டிபாடிகள் கொண்டுவரப்பட்டன. தற்போது 10 நோயாளிகளுக்கு மட்டுமே டோஸ்கள் கிடைக்கின்றன.
ஆனாலும் மேலும் 20 டோஸ்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இருப்பினும் நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் மருந்து கொடுக்கப்பட வேண்டும். மருந்தின் பாதுகாப்பை அறியும் சோதனை வெளியில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.