மலச்சிக்கல், ரத்தஅழுத்தம், இதயநோய், கொழுப்பு – ஃப்ளாக்ஸ் சீட்ஸில் இத்தனை பிரச்னைகளுக்குத் தீர்வா?!

Share

உணவுப் பழக்கங்கள் வழியாக உடல் நலத்தைப் பேணுவதற்கான விழிப்புணர்வு தற்போது பெருகி வருகிறது. சமைத்துச் சாப்பிடும் உணவுகளைத் தாண்டியும் ஆரோக்கியத்துக்கென தனியே சில உணவுப் பொருள்களையும் உட்கொள்கின்றனர். அந்த வரிசையில் ஆளி விதை எனப்படும் ஃப்ளாக்ஸ் சீட்ஸ் (Flax seeds) எடுத்துக் கொள்ளும் பழக்கமும் ஆரம்பித்திருக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இந்த ஃப்ளாக்ஸ் சீட்ஸை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குகிறார் உணவியல் நிபுணர் பிச்சையா காசிநாதன்…

ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன்

அதிகரிக்கும் ஃபிளாக்ஸ் சீட் நுகர்வு!

“வழக்கமான உணவுகளைத் தாண்டியும் ஆரோக்கியமான சில உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வது பற்றியான விழிப்புணர்வு நம்மிடையே பெருகி வருகிறது. அந்த வரிசையில் ஃப்ளாக்ஸ் சீட்ஸ் ஆரோக்கியமானது. இன்றைக்கு இதன் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஃப்ளாக்ஸ் சீட் பூர்விகம் எகிப்து என்றாலும் வட அமெரிக்காவிலும் இது விளைவிக்கப்படுகிறது.

மருத்துவ குணம் செறிந்த இந்த ஃப்ளாக்ஸ் சீட்ஸை முறையாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் நலம் சார்ந்த பல நன்மைகள் கிடைக்கின்றன. இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், வயிறு தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றை இதனை உட்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும். மூளை வளர்ச்சிக்குத் தேவையான சில கூறுகள் இதில் அடங்கியிருப்பதால் நரம்பு மண்டலச் செயல்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கிறது.

ஃப்ளாக்ஸ் சீட்ஸ், பெண்களுக்குப் பல வகைகளில் நன்மை விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக அளவில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதனால் அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாகப் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஃப்ளாக்ஸ் சீட்ஸ் ஹார்மோன் சமநிலையை முறைப்படுத்துவதால் அது சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும். மெனோபாஸ் காலகட்டத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அத்தகைய சூழலில் இது அருமருந்தாகும். பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

இதயம்

ஃபிளாக்ஸ் சீட்ஸ் குறித்த ஆய்வு

இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளான சிலருக்கு ஃப்ளாக்ஸ் சீட்ஸை அரைத்துப் பொடியாக்கி தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு கொடுத்து ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவில், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தின் இரு பிரிவுகளான சிஸ்டோலிக் ப்ரஷர், டயஸ்டோலிக் ப்ரஷர் இரண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

ஆக, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இது உதவுகிறது. முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளவர்களுக்குக் கூட இது உதவும்.

ஃப்ளாக்ஸ் சீட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் இருக்கின்றன. இவை கெட்ட கொழுப்புகளைக் கரைத்து விடும் என்பதால் உடற்பருமன் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களையும் தவிர்க்க முடியும். மேலும் பார்வைத்திறனும் மேம்படும்.

இதில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம். ஆண்டி இன்ப்ளமேட்டரி, அதாவது உள்ளுறுப்புகள் புண்ணாவதையும் இது தடுக்கிறது.

ஃப்ளாக்ஸ் சீட்

எவ்வளவு சாப்பிடலாம்?

ஒவ்வொருவரது உடல் எடை மற்றும் தன்மைக்கேற்ப இதனை எடுத்துக் கொள்ளும் அளவில் வேறுபாடு இருக்கும். சராசரியாக நாளொன்றுக்கு 30 கிராம் சாப்பிடலாம். சிலருக்கு 40 கிராம் கூட தேவைப்படும். எனவே, உணவியல் நிபுணரின் ஆலோசனையோடு சாப்பிடுவதே உகந்ததாக இருக்கும்.

எப்படி சாப்பிடலாம்?

மருந்தகங்கள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகளில் ஃப்ளாக்ஸ் சீட்ஸ் கிடைக்கிறது. இதனை முழு விதையாக அப்படியே சாப்பிடலாம். அதில் எந்த சுவையும் இல்லை என நினைப்பவர்கள் வால்நட், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இல்லையென்றால் ஃப்ளாக்ஸ் சீட்ஸை அரைத்துப் பொடியாக்கி அதை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம். இப்படி எடுக்கையில் செரிமானம் நன்றாக நடக்கும். மலச்சிக்கல் ஏற்படாது. மிக்ஸியில் ரவை மாதிரி அரைத்து கஞ்சியாக்கியும் குடிக்கலாம்.

மோர்

மேற்கத்திய நாடுகளில் ஃப்ளாக்ஸ் சீட் ஆயில் மற்றும் பால் விற்கப்படுகின்றன. இந்தியாவில் அவை இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆயில், பால் ஆகியவற்றை நேரடியாக எடுக்க முடியாது. தண்ணீர் கலந்து குடிப்பதாகத்தான் இருக்கும். எது உங்களுக்கு வசதிப்படுகிறதோ அந்த வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.

எதையும் அதற்கான அளவோடு எடுத்துக் கொள்ளும்போதுதன முழுப்பயன் கிட்டும். தயக்கமே இல்லாமல் ஃப்ளாக்ஸ் சீட்ஸ் சாப்பிடுங்கள்” என்கிறார் பிச்சையா காசிநாதன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com