ஆஸ்திரேலியாவில், காளானை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள நிலையில், விஷத்தன்மையுள்ள காளான்களை அடையாளம் காண்பது குறித்தும், பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியது குறித்தும், விகடன் வாசகர்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே அமைந்துள்ளது லியோகத்தா பகுதி. இங்குள்ள 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன் குடும்பத்திற்காக காளானை சமைத்துள்ளார். ஆனால், அது விஷத்தன்மையுள்ள காளான் என்பது அவருக்குத் தெரியவில்லை. அதனை உண்ட குடும்பத்தினர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 70 வயதுள்ள டான், 66 வயதுடைய ஹீத்தர் மற்றும் கெயில் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இருவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
காளான் உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு வரை நேரிட்ட நிலையில், காளான்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அறிவியல் பெயரின்படி, அமிட்டோ பலோடிஸ் என்ற வகை காளான்களே அதிக விஷத்தன்மையுள்ளவையாகக் கருதப்படுகின்றன. இவ்வகை காளான்களை உட்கொள்வதால் நுரையீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. பொதுவாக விஷக்காளான்களை உட்கொண்ட உடனேயே விளைவுகள் ஏற்படுவதில்லை.