Doctor Vikatan: என் மனைவிக்கு தட்டணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தால் கூடுகிறது சில நாள்களுக்குப் பிறகு மறுபடியும் குறைகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
Karutha pandi, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.

தட்டணுக்களும் குறைகின்றன, ஹீமோகுளோபினும் குறைகிறது என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது இது இரண்டுவகையான பிரசனைகளாக இருக்கலாம். மெகலோபிளாஸ்டிக் அனீமியா (Megaloblastic anemia) என்ற ஒருவகை ரத்தச்சோகை பாதிப்பில் வைட்டமின் பி 12 குறைபாடு அதிகமாக இருக்கும். ஒருவேளை உங்கள் மனைவிக்கு இந்தப் பிரச்னை இருக்கும் பட்சத்தில் தட்டணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் இரண்டும் குறைவது இருக்கும்.
மருத்துவர் பரிந்துரைத்த சத்து மருந்துகளை அவர் சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டாலோ அல்லது அந்த மருந்துகளை உடல் கிரகிக்கும் தன்மையில் பிரச்னை இருந்தாலோகூட இந்த பாதிப்பு தொடரக்கூடும்.
பெரியவர்களுக்கு ஆட்டோஇம்யூன் நோய்கள் பாதிப்பதும் சகஜம். அதில் குறிப்பாக ரத்தம் உடையும் தன்மைக்கு ஆட்டோஇம்யூன் நோய்கள்தான் பிரதான காரணம். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் அணுக்கள் நன்றாக உற்பத்தி செய்யப்படும். ஆனாலும் அந்த அணுக்கள் வாழவேண்டிய காலகட்டம் முழுமையாக இருக்காது, அதாவது சீக்கிரமே அந்த அணுக்கள் அழிந்துவிடும்.

இந்தப் பிரச்னைக்கு காரணம், தன் அணுக்களை தன்னுடையவை என அடையாளம் தெரிந்துகொள்ளத் தெரியாத நிலை. இதிலும் தட்டணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் என இரண்டு அணுக்களும் பாதிக்கப்படலாம்.
மற்றபடி வேறு ஏதேனும் சீரியஸான பிரச்னையாக இருந்தால் அதை மருத்துவர்கள் உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளித்திருப்பார்கள். அந்நிலையில் பிரச்னை மீண்டும் மீண்டும் தொடராது. எனவே சத்துக் குறைபாடு அல்லது ஆட்டோஇம்யூன் நோய் என இரண்டில் உங்கள் மனைவிக்கு எது காரணம் என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கான முறையான சிகிச்சையைப் பின்பற்றுவதுதான் தீர்வு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.