அமெரிக்காவின் கலிஃபோர்னியா சாண்டா பார்பரா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டாமி டிக்கி பயோசென்ட், இன்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஹீதர் ஜுன்குவேரா ஆகியோர், இந்தக் கூட்டு ஆராய்ச்சியை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டனர்.
ஆய்வு குறித்து பேராசிரியர் டாமி டிக்கி கூறுகையில், “நாய்களுக்கு வாசனையை அறியும் நூற்றுகணக்கான ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் (Olfactory receptors) உள்ளன. அவற்றின் மூளையில் மூன்றில் ஒரு பங்கு வாசனையை உணர்வதற்காகச் செயல்படுகிறது. இதனால் கோவிட் தொற்றோடு தொடர்புடைய துர்வாடைகளைக்கூட நாய்களால் கண்டறிய முடியும்.
10.5 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களில் ஒரு துளி துர்நாற்றம் வீசும் பொருளைக்கூட அவற்றால் கண்டறிய முடியும். சில சமயங்களில் வழக்கமான சோதனைகளால் கண்டுபிடிக்கவியலாத கோவிட் தொற்றின் முன் அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நிலைகளையும் நாய்களால் கண்டுபிடிக்க முடிந்தது.
சில சூழலில், நாய் அந்த நபரை விரைவாக மோப்பம் பிடித்து, கோவிட் இருப்பதைக் குறிக்க, உட்கார்ந்து உணர்த்தியது. மற்றவற்றில், நாயின் வாசனைக்கு வியர்வை மாதிரி கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் கோவிட் தொற்றுப் பரிசோதனைகளின் செலவுகள் குறைவதோடு, சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
“நேர்மறையான மதிப்புரைகள் இருந்தபோதிலும், நாய்களை மருத்துவ நோயறிதலின் முக்கிய அங்கமாக வைப்பதில் சவால்கள் உள்ளன; இருப்பினும் நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பிற நிலைமைகளைக் கண்டறிவதில் நாய்களின் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது”‘ என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு குறித்த தகவல்கள் ஆஸ்டியோபதி மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.