நீட் தேர்வு தோல்வியினால் ஏற்படும் தற்கொலைகள் இந்தியாவின் சாபக்கேடாக தொடர்கின்றன. அனிதா முதல், ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்களின் கனவையும் உயிரையும் பலி வாங்கியுள்ளது நீட் அரக்கன்.
சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் (19 வயது) , நீட் பயிற்சிக்காக இரண்டு முறை தேர்வு எழுதியும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் தேர்வு எழுதி 400 மதிப்பெண்கள் பெற்றும், அரசுக் கல்லூரியில் சேர முடியவில்லை. போதுமான பணம் இல்லாததால் தனியார் கல்லுரியில் சேர்வது கடினம் என்பதால் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வையும், அதனால் தொடரும் தற்கொலைகளையும் உளவியல் ரீதியாக அணுகுவது எப்படி என்பதை விளக்குகிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்….

“பொதுவாகவே மனிதர்கள் என்றால் ஆயிரம் பிரச்னைகள் இருப்பது இயல்பு. வாழ்க்கையில் ஏமாற்றங்கள், தோல்வி, இழப்பு ஆகியவற்றால் கடுமையான மன அழுத்தம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதற்கு தற்கொலை தீர்வாக இருக்க முடியாது. நீட் தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் செயல்திறன் மீது அழுத்தம் ஏற்படுகிறது. தன்னுடைய பெற்றோர் கடுமையான பொருளாதர நெருக்கடியின் மத்தியில் படிக்க வைக்கிறார்கள்.
அவர்களுக்காக நீட் தேர்வில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற அழுத்தம் மாணவர்கள் மீது விழ, முயற்சி தோல்வியுற்றால் மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நம்முடைய பெற்றோருக்கு வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லையே என்ற வலி அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினாலும் மருத்துவப்படிப்புக்கான நுழைவுச்சீட்டுகள் குறைவாகவே உள்ளன.
அதனால் எத்தனை மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்பதை யோசிக்க வேண்டும். வெற்றி என்றால் கொண்டாட்டம், தோல்வியென்றால் இறப்பு என்று எண்ணாமல் வெற்றியையும் தோல்வியையும் பக்குவமாகக் கையாள வேண்டும். ஜெகதீஸ்வரன் விஷயத்தைப் பொறுத்தவரை அவரின் தந்தையும் இறந்துவிட்டார். அவரால் தன்னுடைய உலகமான மகனின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகனின் இழப்பு அவர் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பியிருக்கும்.

கேள்விகளும், சமுதாயத்தின் மீதும் அரசின் மீதுமான கோபமும் தன் உயிர் மீதும், உடல் மீதும் திரும்புகையில் தற்கொலை நேர்கிறது. இதனை சரிசெய்வதற்கான முயற்சியை தனிமனிதன் மீது மட்டும் திணிக்காமல் சமூகமும் அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
தோல்வியையும் பிரச்னையையும் கையாள்வதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தன்னுடன் இருப்பவர்கள் சரியான மனநலனுடன் இருக்கிறார்களா என்று ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும்” என்றார்.