சர்க்கரை நோய் என நாம் அழைக்கும் நீரிழிவு நோயை, முந்தைய காலத்தில் பணக்கார வியாதி என்று சொல்வார்கள். ஏனென்றால் பெரிய அளவில் உடல் உழைப்பில்லாத, வசதி படைத்தவர்கள்தான் அதிகளவில் நீரிழிவுக்கு ஆட்பட்டதால் அப்படியாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை முற்றிலுமாக மாறி வயது வேறுபாடு, வர்க்க வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நீரிழிவுக்கு ஆளாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. வருமுன் காப்பதே சிறந்தது என்கிற தாரக மந்திரம் அனைத்து நோய்களுக்கும் பொருந்தக்கூடியது. எந்த நோயாக இருந்தாலும் முடிந்தவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது எளிது.
அந்த வகையில், நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி என்பதை, சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நோய் மருத்துவர் முத்துக்குமரன் ஜெயபாலிடம் கேட்டோம்…
“வழக்கத்துக்கு மாறாக அதிக தாகம் எடுப்பது, அதிக அளவில் சிறுநீர் கழிப்பது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக அளவில் பசி எடுப்பது, சாப்பிட்ட உடனேயே தூக்கம் வருவது அல்லது தலைசுற்றல் மற்றும் அரை மயக்க நிலைக்குச் செல்வது என நிறைய அறிகுறிகள் இருக்கின்றன. திடீரென எடை அதிகரிப்பது அல்லது குறைவது ஆகிய இரண்டுமே கூட நீரிழிவின் காரணமாக நடக்கும். ரத்த சர்க்கரை அளவு 200 என்கிற அளவில் இருந்தால் உடல் எடை கூடவும், 300க்கும் அதிகமாக இருந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பிருக்கிறது.