லட்டு, சாட், பக்கோடா, சட்னி… வேர்க்கடலையில் வீக் எண்டு விருந்து

Share

வறுத்தது அல்லது வேக வைத்தது அல்லது பர்பி… வேர்க்கடலையை இந்த மூன்று விதங்களில் சாப்பிட்டுப் பழகியவர்கள்தான் பலரும். அதைத் தாண்டி வேர்க்கடலையில் விதம் விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. இனிப்பு முதல் சாட் அயிட்டம் வரை வேர்க்கடலையில் விருந்தே சமைக்கலாம். இந்த வார வீக் எண்டை வேர்க்கடலை ஸ்பெஷலாக்க ரெடியா….?

வேர்க்கடலை லட்டு

தேவையானவை:

* பச்சை வேர்க்கடலை – ஒரு கப்

* பொடித்த வெல்லம் – முக்கால் கப்

* நெய் – 2 டேபிள்ஸ்பூன்

வேர்க்கடலை லட்டு

செய்முறை:

பச்சை வேர்க்கடலையை அதன் தோல் பிரவுன் நிறமாக மாறும் வரை வெறும் வாணலியில் வறுக்கவும். ஒருகட்டத்தில் கடலையின் தோல் பிரிந்து வெளியே வர ஆரம்பிக்கும். இப்போது வாணலியைக் கீழே இறக்கவும். பிறகு வறுத்த கடலையைக் கைகளால் தேய்த்து ஊதினால் அவற்றின் தோல் முழுவதும் சுலபமாக வந்துவிடும். தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும்.

பிறகு இதனுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மறுபடியும் அரைக்கவும். அரைத்த இந்தக் கலவையை ஒரு பவுலுக்கு மாற்றவும். அதனுடன் உருக்கிய நெய்யைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும். உருண்டைகளாகப் பிடிக்கவும்.

வேர்க்கடலை சாட்

தேவையானவை:

* வேர்க்கடலை (வறுக்காதது) – அரை கப்

* துருவிய கேரட் – ஒரு டேபிள்ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன்

* பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

* துருவிய மாங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன்

* சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

* எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்

* சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

வேர்க்கடலை சாட்

செய்முறை:

வேர்க்கடலையைத் தண்ணீரில் 30 முதல் 40 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு குக்கரில் 5-6 நிமிடங்கள் வேகவைக்கவும். ஒரு பவுலில் நறுக்கிய தக்காளியையும் வெங்காயத்தையும் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் துருவிய கேரட்டைச் சேர்க்கவும். பிறகு புதினா இலைகளைச் சேர்க்கவும்.

பின்னர் துருவிய மாங்காயைச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து மறுபடியும் நன்கு கலக்கவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சாட் மசாலாத்தூள், சர்க்கரை சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். வேர்க்கடலை சாட் ரெடி!

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை:

* கடலை மாவு – 2 கப்

* அரிசி மாவு – ஒரு கப்

* வேர்க்கடலை (வறுக்காதது) – ஒரு கப்

* மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிதளவு

* உப்பு – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

வேர்க்கடலை பக்கோடா

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி இதனுடன் கலந்துகொள்ளவும்.

ஒரு கை நிறைய தண்ணீரை எடுத்து மாவின் மேல் தெளித்து மாவைப் பிசறிவிடவும். பிசறிய மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிற மாகப் பொரித்தெடுக்கவும்.

ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி

தேவையானவை:

* பச்சை வேர்க்கடலை – ஒரு கப்

* காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5

* இஞ்சி – ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)

* பூண்டு – 6 பல்

* நறுக்கிய வெங்காயம் – கால் கப்

* புளி – எலுமிச்சை அளவு

* எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

* எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

* கடுகு – ஒரு டீஸ்பூன்

* உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

* சீரகம் – அரை டீஸ்பூன்

* பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்

* கறிவேப்பிலை – 10

வேர்க்கடலை சட்னி

செய்முறை:

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் வேர்க்கடலையைப் போட்டு அதன் தோல் லேசான பிரவுன் நிறமாக மாறும் வரும் வரையில் வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வதக்கி வேர்க்கடலையுடன் சேர்க்கவும். கலவை ஆறியதும் இதனுடன் உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் மையாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, சில விநாடிகள் வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதைச் செய்து வைத்திருக்கும் சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும். ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி தயார்.

இந்தச் சட்னியை இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com