How to: மருத்துவ குணமுள்ள அத்திக்காயை ருசியாக சமைப்பது எப்படி? | How To Cook Figs In Easy Methods?

Share

அத்தி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அத்திப்பழம், உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது. கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும் அத்திப்பழத்தைப் பெரும்பாலானோர் தேனில் ஊற வைத்தும், காய வைத்துப் பொடியாக்கியும் சாப்பிட்டிருப்போம்.

ஆனால், இளம் காயாக இருக்கும் அத்தியைப் பறித்து ருசியாக சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல். வாய் ருசிக்க அத்திக்காயை சமைப்பது எப்படி, அதன் எளிமையான செய்முறை உள்ளிட்டவற்றை விவரிக்கிறார் மேட்டூரை சேர்ந்த ஃபிசியோதெரபிஸ்ட் விஜயா.

அத்திக்காய் பொரியல்

தேவையான பொருள்கள்:

அத்திக்காய் – கால் கிலோ (நல்ல இளம் காயாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். காயின் காம்பை உடைத்தால் பால் வரக்கூடிய அளவுக்கு இருப்பது போன்ற காய் என்றால் மிகவும் நல்லது)

பெரிய வெங்காயம் நறுக்கியது – 2

வரமிளகாய் – காரத்துக்கு ஏற்ப

தக்காளி – 1

பூண்டு – 6- 8 பல்

சோம்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

கடுகு – தாளிக்க

கறிவேப்பிலை – தேவையான அளவு

பிசியோதெரபிஸ்ட் விஜயா | மேட்டூர்.

செய்முறை

* அத்திக்காயை சிறிது சிறிதாக வெட்டி நன்றாகக் கழுவிக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

* முக்கால் பதம் வெந்ததும் நீரில் இருந்து எடுத்து தனியாக வடிகட்டி வைக்கவும்.

* ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்க்கவும். கூடவே நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம் வதங்கியதும் பூண்டு பல் மற்றும் சோம்பு இரண்டையும் சேர்த்து வதக்கவும். இந்தப் பூண்டும், சோம்பும்தான் இந்த டிஷ்ஷுக்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கக் கூடியது. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* இத்துடன் வேகவைத்து வடிகட்டிய அத்தியைப் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும். எண்ணெயில் வதக்க வதக்க உருளைக்கிழங்கு பொரியல் போலவே மொறுமொறுவென வர ஆரம்பிக்கும். அந்தப் பதத்தில் இறக்கி ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு எனத் தொட்டுக்கொள்ள வைத்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.

அத்தி சாம்பார்

தேவையான பொருள்கள்:

பாசிப்பருப்பு – தேவையான அளவு

அத்திக்காய் – கால் கிலோ

பெரிய வெங்காயம் நறுக்கியது – 2

மஞ்சள் தூள் – சிறிதளவு

தக்காளி – 2

பூண்டு – 2 பல்

உப்பு – சுவைக்கு ஏற்ப

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – தாளிக்க

கறிவேப்பிலை – தேவையான அளவு

சமையல்

செய்முறை

* அத்திக்காயை மஞ்சள் தூள் போட்டு நீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* பாசிப்பருப்பை குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* பாதி வெந்திருக்கும் பாசிப் பருப்புடன் அத்திக்காய் மற்றும் உங்களுக்கு விருப்பமான சாம்பார் காய்கள் போட்டு ஒரு விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, தக்காளி, போன்றவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

* நன்றாக வதங்கிய பின் வேகவைத்து எடுத்து வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்த்து கூடவே தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

* பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு உளுந்து தாளித்து, கூடவே கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை அணைத்த பின் பெருங்காயம் ஒரு பின்ச் சேர்த்து இறக்கி சாம்பாரில் சேர்க்கவும். அவ்வளவுதான்… அத்திக்காய் சாம்பார் தயார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com