சர்க்கரையில் தயாரான இனிப்புகளை அடிக்கடி விரும்பிச் சாப்பிடுபவரா நீங்கள்? இனி அடுத்தமுறை ஸ்வீட் சாப்பிட சற்று யோசிப்பது நல்லது. ஏனென்றால், சர்க்கரையால் தயாரிக்கப்படும் இனிப்புகளை அதிகம் உட்கொள்வது உங்கள் சருமத்தை பாதிக்கும் என்று சருமநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இனிப்பு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நல்ல தகவல்களைப் பரிமாற, மகிழ்ச்சியை வெளிப்படுத்த இனிப்பை வழங்கித்தான் கொண்டாடுகிறோம். நமது உடலுக்கு சர்க்கரை தேவைதான். அதேநேரம், அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். எப்போதாவது ஒருமுறை சர்க்கரையால் தயாரான இனிப்பு சாப்பிடுவது பெரிய பாதிப்பை உண்டாக்காது; ஆனால், அதிகப்படியான வெள்ளை சர்க்கரையை தினசரி உட்கொள்வது நமது உடல் மற்றும் மனநலனில் பாதிப்பை விளைவிக்கும் என்கின்றனர் சருமநல நிபுணர்கள்.
இது குறித்து, சருமநல மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், தொடர்ந்து சர்க்கரையை உட்கொள்வது, நமது சருமத்தின் மேல் அடுக்கில் சில கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
“இனிப்பு வகைகளை ஒருபிடி பிடிப்பவர் என்றால், அது உங்கள் சருமத்தை பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சர்க்கரையானது உங்களின் நிறம் மற்றும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை பாதிக்கும்; பல்வேறு சரும பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சர்க்கரை, வீக்கத்தைத் தூண்டுவதோடு, சருமம் சிவந்து போவது மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கிறது. இதற்குத் தீர்வாக பழங்கள், காய்கறிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். சருமம் வயதாவதை சர்க்கரை துரிதப்படுத்துகிறது. இதனால் கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இழைகள் கடினமாகும், அவற்றின் மீள்தன்மை குறையும். வயோதிக தோற்றம் விரைவாக ஏற்படுவதைத் தடுக்க, குறைந்த கிளைசெமிக் உணவுகளான பழங்கள், காய்கறிகள், தானியங்களை உட்கொள்ளலாம்.
கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஃபைபர்களை சர்க்கரை சேதப்படுத்துவதன் மூலம், சருமச் சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு, வைட்டமின் சி மற்றும் இ நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். சருமத்தின் நெகிழ்வுத் தன்மைக்கு உதவும் கொலாஜென் உற்பத்தியை அதீத சர்க்கரை பயன்பாடானது பாதிக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், கொலாஜன் அதிகரிக்கும்.

உணவில் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். அதேபோல், சருமத்தின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து, எண்ணெய் மற்றும் ஈரப்பதம் தக்கவைப்பதை சர்க்கரை பாதிக்கிறது. சமச்சீர் உணவு மற்றும் சரியான சருமப் பராமரிப்பு வாயிலாக இதை சரி செய்யலாம் என்று, தனது பதிவில் சருமநல மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா.