பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களை, கர்ப்பகாலத்தில் பெண்கள் உட்கொள்வது, பிறக்கும் குழந்தையின் தலையைப் பெரிதாக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.
ஜங்க் ஃபுட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு என்பது, சூடான அல்லது குளிர்ந்த, அடைத்து விற்கப்படும் உணவுகள், இனிப்பு மற்றும் சோடா உள்ளிட்டவையாகும். இந்த உணவுகளில் ரசாயனக் கூறுகள் உள்ளன. அவற்றில் நார்ச்சத்து அகற்றப்பட்டு சர்க்கரை, கொழுப்புகள் அல்லது உப்பு அதிகம் சேர்க்கப்படுகின்றன.
இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவு, மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். இதய நோய், புற்றுநோய், உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படுகின்றன.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை கர்ப்பிணிகள் உண்பதால், குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வானது, பிரேசில் நாட்டில் 417 கர்ப்பிணிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவு வழங்கப்பட்டு, அதை உண்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் தாக்கம் குறித்து ஆராயப்பட்டது.