‘இன்னிக்கு என்ன குழம்பு வைக்கிறது….’ பொழுதுவிடிந்தால் பலரின் மண்டைக்குள்ளும் ஓடும் கேள்வி இதுதான். வாரக் கடைசி என்றால் இந்தக் குழப்பம் இன்னும் அதிகரிக்கும். தினமும் சமைக்கிறதையே வீக் எண்டுக்கும் செய்யணுமா என்ற கேள்வி எழும். வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் சூப்பர் குழம்பு ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக… குழம்பு குழப்பமின்றி வீக் எண்டை கொண்டாடுங்கள்…
கறிவேப்பிலைக் குழம்பு
தேவையானவை:
கறிவேப்பிலை – 2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8 (இரண்டாக உடைத்து போடவும்)
கடலைப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, புளிக்கரைசல் ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன்பு கறிவேப்பிலைப் பொடி தூவி, இறக்கி மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துப் பரிமாறவும். இந்தக் குழம்பு தொக்கு பதத்தில் இருக்கும். எனவே, அளவோடு பரிமாறவும்.
பாகற்காய்- வேர்க்கடலைக் குழம்பு
தேவையானவை:
பாகற்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 10 பல் (முழுவதுமாகப் போடவும்)
பெருங்காயம் – 1 சிட்டிகை
தேங்காய் – அரை மூடி (அரைத்து வைக்கவும்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை வேர்க்கடலை – 100 கிராம்
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் முழு வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். வேர்க்கடலையை இத்துடன் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பாதி வேக்காட்டில் பாகற்காயைச் சேர்த்து வேக விட்டு, புளிக்கரைசல் ஊற்றி பச்சை வாசனை போனதும், அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
காய்கறி கோலா உருண்டை
தேவையானவை:
கேரட் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பீன்ஸ் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு – 100 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கவும்)
முட்டைகோஸ் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 25 கிராம்
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கவும்)
பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன் லவங்கப்பட்டை,
கிராம்பு, ஏலக்காய் – தலா 2
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – அரை டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
தேங்காய்த்துருவல் – அரை மூடி (அரைத்துக் கொள்ளவும்)
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குடன், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிட்டு இறக்குவதற்கு முன், மற்ற காய்களைச் சேர்த்து 2 நிமிடம் கழித்து வடித்து வைக்கவும். இதில் தலா ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள், சோம்புத்தூள், பாதியளவு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இதை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி , ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து மீதம் இருக்கும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
இதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். இத்துடன், மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், கரம்மசாலாத் தூள், சேர்க்கவும். பிறகு, அரைத்த தேங்காய் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கலவையின் பச்சை வாசனை போனதும், பொரித்த காய்கறி உருண்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பாண்டிச்சேரி இறால் குழம்பு
தேவையானவை:
இறால் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 6 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்) + 2 (தாளிக்க)
தேங்காய் – கால் மூடி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 50 கிராம் (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1 மீடியம் சைஸ்

செய்முறை:
காய்ந்த மிளகாய், தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகத்தை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மீதம் இருக்கும் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், இறால், தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு சிம்மில் வைத்து வேக விடவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கி, மூடி வைத்து பிறகு பரிமாறவும்.