பொங்கல் நெருங்கும்போதுதான் கரும்பு கிடைக்கும். ஆனால் கரும்புச்சாறு வருடம் முழுவதும் கிடைக்கும். கரும்புச்சாற்றை அப்படியே குடிப்பது தவிர, அதை வைத்து விதம் விதமான உணவுகள் செய்யலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்? இந்த வார வீக் எண்டை கரும்புச்சாறு உணவுகளுடன் இனிப்பாகக் கொண்டாடுவோமா?
கரும்புச்சாறு பாயசம்
தேவையானவை:
* பச்சரிசி – கால் கப்
* பாசிப்பருப்பு – கால் கப்
* கரும்புச்சாறு – 2 கப்
* தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
* முந்திரிப்பருப்பு (உடைத்தது) – ஒரு டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
* நெய் – சிறிதளவு
* பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அரிசியைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பை சிவக்க, மணக்க வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் அரிசி, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு ஒரு கப் கரும்புச்சாறு ஊற்றி ஒரு விசில் வரும்வரை வேகவிட்டு எடுக்கவும்.
தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்தும் வேகவிடலாம். பின்னர் குக்கரைத் திறந்து கலவையை வாணலிக்கு மாற்றவும். பிறகு இதை அடுப்பில் ஏற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மீதமுள்ள கரும்புச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வேகவிடவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடாக்கி, அதில் தேங்காய்ப் பல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் பனீர் துருவல் போட்டுக் கிளறி அடுப்பை அணைக்கவும். இதைக் கொதிக்கும் கரும்புச்சாறு பாயசத்தில் சேர்த்துக் கலந்து அடுப்பை நிறுத்திப் பரிமாறவும்.
குறிப்பு: இதற்குத் தனியாக வெல்லத் துருவலோ, சர்க்கரையோ தேவையில்லை. கரும்புச்சாற்றில் உள்ள இனிப்பே போதுமானது.
கரும்புச்சாறு நட்ஸ் பர்ஃபி
தேவையானவை:
* கோதுமை மாவு, மைதா மாவு – தலா கால் கப்
* கரும்புச்சாறு – ஒன்றரை கப்
* நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல் – தலா 3 டேபிள்ஸ்பூன்
* உடைத்து வறுத்த முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* பட்டைத்தூள் – ஒரு சிட்டிகை
* கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன் (இனிப்பு இல்லாதது)
* நெய் – தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து நாட்டுச்சர்க்கரை, கரும்புச்சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். நாட்டுச்சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி மஸ்லின் துணி அல்லது வடிகட்டியால் கலவையை வடித்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடாக்கி கோதுமை மாவு, மைதாவைத் தனித்தனியே சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் வடிகட்டிய கரும்புச்சாறு பாகை ஊற்றி குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும்.
இதனுடன் வறுத்த மாவு, தேங்காய்த் துருவல், வறுத்த நட்ஸ் சேர்த்து சிறிதளவு நெய்விட்டு கைவிடாமல், கட்டித்தட்டாமல் கிளறவும். பிறகு கோகோ பவுடர், பட்டைத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கிளறவும்.
கலவை வெந்து நன்கு சுருண்டு வந்ததும் நெய் அல்லது வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டு, விருப்பமான வடிவத்தில் கத்தியால் வெட்டியெடுத்துப் பரிமாறவும்.
கரும்புத்துண்டு லாலிபாப்
தேவையானவை:
* தோல் சீவி, வெட்டிய கரும்புத்துண்டுகள் – 10
* சாக்லேட் சாஸ் – 4 டேபிள்ஸ்பூன்
* கலர் ஸ்பிரிங்கிள்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்
* லாலிபாப் குச்சி – 10
* டிரை செர்ரிப்பழம் – 10

செய்முறை:
கரும்புத்துண்டில் சிறிதளவு சாக்லேட் சாஸ் தடவவும். அதன்மேல் கலர் ஸ்பிரிங்கிள்ஸ் தூவி அடியில் லாலிபாப் குச்சி செருகவும். பின்னர் மேற்புறம் செர்ரிப்பழம் செருகி ஃப்ரீஸரில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
இதே போல அனைத்து கரும்புத் துண்டுகளையும் செய்யவும். வழக்கமாகக் கரும்பைச் சுவைப்பது போலவே சுவைத்து, சக்கையைத் தூக்கியெறியவும். சாக்லேட் சுவையுடன் இருப்பதால், கரும்பு சாப்பிடுவதைவிட இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
கரும்புச்சாறு சோர்பெட்
தேவையானவை:
* கரும்புச்சாறு – 3 கப்
* எலுமிச்சைப்பழம் – ஒன்று
* இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
* புதினா இலை – 4
* பொடித்த சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
எலுமிச்சையைப் பிழிந்து கொட்டை நீக்கி, சாற்றை எடுத்துக்கொள்ளவும். வாய் அகன்ற பவுலில் கரும்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி விழுது, பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் இதனுடன் புதினா இலை சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஃப்ரீஸரில் 6 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு இதை மிக்ஸியில் அடித்து, கிண்ணங்களுக்கு மாற்றிப் பரிமாறவும்.