"தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?"- முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு

Share

கடந்த மே மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து இன்றைய தினம் அமலாக்கத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் இல்லங்களிலும், தலைமைச் செயலகத்தில் அவரின் சேம்பரிலும் சோதனை நடத்திவருகிறது. இதற்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி இல்லத்தில் ரெய்டு

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தன் வசமிருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க பழிவாங்குவது, அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீபகாலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

‘சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், எந்தச் சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தயார்’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜியே பேட்டியும் அளித்திருக்கிறார். விசாரணை நடைபெறும் இடத்திலிருந்து முழு ஒத்துழைப்பைத் தந்து வருகிறார். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை.

ஸ்டாலின்

தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா என்பதும் தெரியவில்லை. இவையெல்லாம், விசாரணை அமைப்பு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக்காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் இரண்டு நாள்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நிலையில், உடனடியாக இது போன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்?

பொதுமேடைகளில் தி.மு.க-வையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துச் சென்றார். அதற்குத் தகுந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால், இது போன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவதாகும். ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்தியக் காவல் படையை அழைத்துவந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், 2016-ம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு – கூட்டாட்சி பேசிக்கொண்டே அந்தத் தலைமைச் செயலகத்தில் மத்தியக் காவல் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது மத்திய அரசு.

`இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது’ என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத் தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பா.ஜ.க உருவாக்கிவருகிறது.

தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறை

பா.ஜ.க-வின், மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இது போன்று புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க தலைமை உணர வேண்டும். அதை அவர்களே உணரும் காலம் நெருங்கிக்கொண்டுதான் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com