Doctor Vikatan: கறுத்து வறண்டு போன சருமம்… தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் எனக்குத் தீர்வு உண்டா?

Share

Doctor Vikatan: என் வயது 28. நான் கறுப்பாக இருக்கிறேன். என் சருமம் மிகவும் வறண்டிருக்கிறது. எந்த ஃபேர்னஸ் கிரீமையும் என் சருமம் ஏற்றுக் கொள்வதில்லை. சரும நிறம் குறித்து நான் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறேன். அழகுக்கலை நிபுணரைப் பார்க்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. பலரும் என்னை விநோதமாகப் பார்ப்பதாக உணர்கிறேன். சரும நிறத்தால் என் முக அமைப்பே மாறுவது போல் இருக்கிறது. மனிதர்களைச் சந்திப்பதையே தவிர்க்கிறேன். என் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

– Misty Batia, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கீதா அஷோக்

காந்தல் ருசி… கறுப்பே சிறப்பு என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். உங்களுடைய கேள்வியில் சருமம் வறண்டிருப்பதாகச் சொல்லியிருப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளலாம். சரும வறட்சி என்பது முதுமையின் அறிகுறிகளில் ஒன்று என்பதால் அதற்கான தீர்வுகள் குறித்துப் பேசலாம். ஆனால் கறுப்பாக இருப்பது குறித்த உங்கள் தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. கறுப்பான சருமம் என்பது கவலைக்குரிய விஷயமல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் சமுதாயத்தில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கும் பலரும் மாநிறமானவர்களாக, கறுத்த சருமம் கொண்டவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். கறுப்பான சருமத்தை மாற்றுவதற்கான தீர்வுகள் சொல்வதுகூட அந்த நிறத்தை அவமானமாகக் கருதுவது போலாகிவிடும். எனவே கறுப்பாக இருந்தாலும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகள் பற்றி யோசியுங்கள்.

உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறதா, உடல் சூடாக இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் உள்ளங்கையை கன்னத்தில் வைத்துப் பாருங்கள்…. கதகதப்பாக உணர்கிறீர்கள் என்றால் உடலில் சூடு இருப்பதாக அர்த்தம். தலையில் எண்ணெய் வைத்து உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்துப் பாருங்கள். சூட்டை உணர்ந்தால் உங்கள் உடலில் சூடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். உடல் முழுவதும் இப்படி சூடாக இருக்கும் நிலையில் நீர் வறட்சி ஏற்படலாம்.

சருமம் பொலிவாக இருக்க நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் மிக முக்கியம். உங்கள் சருமம் எத்தகையது என்பதைக் கண்டுபிடியுங்கள். காலையில் எழுந்ததும் சருமம் வறண்டு காணப்பட்டால் அது வறண்ட சருமம். முதல் வேலையாக நீங்கள் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

தண்ணீர் பருகுதல்

காலையில் எழுந்ததும் காய்ச்சாத பால் எடுத்து, பஞ்சில் நனைத்து முகம், நெற்றி முழுக்கத் தடவித் துடைக்கவும். காய்ச்சாத பாலில் ஈரப்பதம் அதிகம். அதனால் சருமத்தின் ஆழத்தில் படிந்துள்ள அழுக்குகள் அகன்று சருமம் ஈரப்பதத்தைப் பெறும். பாலைத் தடவித் துடைத்ததும் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து பிறகு முகம் கழுவவும்.

ஓட்ஸை பொடித்து காய்ச்சாத பால் விட்டு, சில துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவி, வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இதன் மூலம் சருமத்தின் அடியில் படிந்த இறந்த செல்கள் நீங்கும். முகம் பொலிவாகும்.

அதிகாலையில் எழுந்ததும் தினமும் 2 டீஸ்பூன் நெய் சாப்பிடலாம். அது சரும வறட்சியைப் போக்கும். நெய் சாப்பிட்டால் உடல் பருமன் கூடுமோ என பயப்பட வேண்டாம். உருக்கிய நெய் சேர்த்துக்கொள்ளும்போது சருமம் ஈரப்பதம் இழக்காமல் இருக்கும். இப்படி வெறும் வயிற்றில் நெய் சாப்பிடப் பிடிக்காவிட்டாலும், சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

சருமப் பராமரிப்பு

உருளைக்கிழங்கைக் கழுவி, துருவி சாறு எடுத்துக்கொள்ளவும். அதை அப்படியே சிறிது நேரம் வைத்திருந்தால் தண்ணீர் மேலே நிற்கும். ஸ்டார்ச் பகுதி அடியில் தங்கும். அந்த ஸ்டார்ச்சில் சில துளிகள் தேன், சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து கழுவுங்கள். இது உங்கள் சரும வறட்சியையும் போக்கும். சரும நிறத்தை ஒரு ஷேடு பிரைட்டாகவும் காட்டும். எக்காரணம் கொண்டும் சரும நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை மட்டும் வளர விடாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com