Doctor Vikatan: நான் மூன்று வேளைகளும் நன்றாகச் சாப்பிடுகிறேன். 7- 8 மணி நேரம் தூங்குகிறேன். ஆனாலும் எப்போதும் களைப்பாகவே உணர்கிறேன். என்ன காரணமாக இருக்கும்… இதற்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
கேள்வியில் உங்கள் வயதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் ஆணோ, பெண்ணோ…. முதலில் கவனிக்க வேண்டியது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு. அது ஆண்களுக்கு 13.2 – 16.6 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 11.6 – 15 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். அதைவிடக் குறைவாக இருக்கிறதா என்பதை ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம். ரத்தச்சோகை இருந்தால் இப்படி களைப்பாக உணர்வீர்கள்.
அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவு. வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் போதாது. வியர்வையின் மூலம் நம் உடல் இழக்கும் உப்புச்சத்தை ஈடுகட்டுகிறோமோ என்றும் பார்க்க வேண்டும். அதற்கு நீர்மோரில் உப்பு சேர்த்துக் குடிக்கலாம் அல்லது கிட்னி ஃபங்ஷன் டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு, எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தால் மருந்துக் கடைகளில் கிடைக்கும் எலக்ட்ரால் பவுடர் வாங்கி, தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம்.