ஒற்றுமையாக இருக்கும் கிராமத்தைப் பிரிக்கச் சாதி கலவரத்தைக் கையில் எடுக்க நினைக்கும் அரசியல்வாதிதான் பிரச்னை என நகர்ந்துகொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் கருவேலமரம், கார்ப்பரேட்களின் கொள்ளை என தடம் மாறுகிறது. சாந்தனு – ஆனந்தி காதல், சாந்தனு சஞ்சய் மோதல், சாதியை வைத்து ஊரைப் பிரிக்க நினைக்கும் வில்லன்கள், கருவேலமரம் – கார்ப்பரேட் அரசியல் என இரண்டாம் பாதி திரைக்கதை பல கிளைகளாகப் பிரிகிறது. ஆனால், விறுவிறுவென வளரும் எந்த கிளையிலுமே சுவாரஸ்யமாகவோ ரசிக்கும்படியோ எதுவும் இல்லை. அதனால், முக்கிய கதாபாத்திரங்களின் மரணங்களும் கூட, பார்வையாளர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் தரவில்லை. இறுதிக்காட்சியும் அதீத நாடகத்தன்மையுடன் இருப்பது சோகத்திலும் சோகம்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு, படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ஒரு இராமநாதபுர கிராமத்தின் வெயிலையும், வறட்சியையும் ஒப்பனைகள் அற்று, ‘ராவாக’ காட்டியிருக்கிறது. சில இரவுநேர காட்சிகளிலும் கவனம் பெறுகிறார். ஆனால், இறுதிக்காட்சிக்கு முந்தைய சண்டைக் காட்சிகளின் தொகுப்பில், இதுவரை இருந்த நேர்த்தி காணாமல் போகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் பெரிதாக முணுமுணுக்க வைக்கவில்லை என்றாலும் சோதிக்காமல் கடந்து செல்கின்றன. ஆனால், எந்தப் புதுமையும் இல்லாது ஒலிக்கும் பின்னணியிசை, வெகுசில காட்சிகளுக்கு மட்டுமே கைகொடுத்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் கொஞ்சம் கண்டிப்புடன் இருந்திருக்கலாம். விறுவிறுப்பான கதை நகர்வுகளுக்கு இடையே தேவையில்லாத காமெடி, காதல் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். வழக்கமான ‘அழகான’ கிராமத்து செட்அப்பில் இருந்து விலகி, கருவேலமரங்களுக்கு இடையே இருக்கும் ஊரின் அமைப்பை எதார்த்தமாகக் காட்டியதில் கலை இயக்குநர்கள் நர்மதா வேணியும், ராஜுவும் கவனம் ஈர்க்கிறார்கள்.