தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.04.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அனுப்பப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் குறித்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும்போதிலும், அவை இப்போது மதிக்கப்படுவதோ… பின்பற்றப்படவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால், அந்தந்த மாநிலங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் முடங்கிப்போயிருக்கின்றன.
மாநிலச் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு, மத்திய அரசுக்கு வலியுறுத்தி தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் தனித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தங்கள் மாநிலச் சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசின் இறையாண்மை, சுயமரியாதையை நிலைநிறுத்தலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனால் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தைப் போல பிற மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தேசிய அளவில் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தி.மு.க இறங்கியிருக்கிறது. காங்கிரஸோடு இணைய சுணக்கம் காட்டும் ஆத் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் உள்ளிட்ட சில கட்சிகள்கூட தி.மு.க-வோடு தயக்கமின்றி கைகோக்கின்றன.