local body election admk ex minister os manian criticized bjp

Share

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஏழு வார்டுகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில், திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது உள்ள அரசு வழங்கிய பொங்கல் பரிசைவிட அவமானகரமான செயல் எதுவும் கிடையாது. உப்பைக் கூட குஜராத்தில் இருந்து வாங்கும் இந்த ஆட்சி உருப்படுமா? ஆண்கள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தால் கூட பேசும் பொருளாகாது.

பெண்கள் நேரடியாக இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதால் விமர்சனம் அதிகரித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி் வெற்றி பெற்றுள்ளார்கள்.

நீட் விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நீட்டை எதிர்த்தோம். நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றது, முன்னாள் நிதி அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம் என்பதை அனைவரும் அறிவார்கள். நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முறியடிக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் அதிமுகவின் கேள்வி.

சனி விலகியது!

சனி உள்ளிட்ட சில தேவையற்ற நட்சத்திரங்கள் இருந்தால் நல்லது நடக்காது என்பார்கள். அது போல நம்முடன் இருந்த தேவையற்ற நட்சத்திரங்கள் இல்லாமல் (பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கிறார்) சுதந்திரமாக நாம் தேர்தலை சந்திக்கிறோம். இது நல்ல சகுனம். தேர்தலில் நமக்கு நன்மையே நடக்கும்.

கூட்டுறவு கடன், நகைக் கடன் உள்ளிட்டவைகளில் திமுக அரசு தள்ளுபடி என சொல்லி மோசடியே செய்து உள்ளது. வெள்ள காலங்களில் அதிமுக அரசு, 100% இழப்பீடுகள் வழங்கியது. கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்து, இன்சுரன்ஸ் தொகையை பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு.

ஆனால், விவசாயிகள் இதையெல்லாம் தெரிந்தும் கூட டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை. திமுக அரசு, விடியல் அரசு என்று எல்லா மக்களிடம் இருந்து பறிக்கிற அரசாக இருக்கிறது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாத இந்த அரசினால், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை எப்படி கொடுக்க முடியும்? இந்த கேள்வியை பக்குவமாக ஒவ்வொரு பெண்களிடம் கேட்டால், ஒருவர் கூட இவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” எனறு எ ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com