பட மூலாதாரம், ANI
இதே இடத்தில் 2021 ஆம் ஆண்டும் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டது
கேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தினமும் டன் கணக்கிலான குப்பைகளை பதப்படுத்தி வரும் இந்த உள்ளூர் கழிவு மேலாண்மை ஆலையில், கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
அந்த பகுதியில் வசித்து வரும் உள்ளூர் மக்கள், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பட்சத்தில் கட்டாயம் N95 மாஸ்க் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள நச்சுப் புகை கட்டுக்குள் வரும் வரை, குழந்தைகளின் நலனைக் கருதி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாமென உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கிடைத்த தகவலின்படி, தீ விபத்து தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது எனவும், விரைவிலேயே முழுமையாக அனைத்து தீயும் அணைக்கப்படும் எனவும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல கழிவு மேலாண்மை ஆலைகளில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பெரும்பாலும் குப்பை கிடங்குகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மக்கும்போது, உருவாகும் மீத்தேன் வாயுக்கள் இது போன்ற தீ விபத்துகளை ஏற்படுத்துகிறது.
கொச்சி நகரின் எல்லையில் அமைந்துள்ள இந்த பிரம்மபுரம் கழிவு மேலாண்மை ஆலை வளாகத்தில், மிகப்பெரிய அளவிலான குப்பைகள் தினமும் மேலாண்மை செய்யப்பட்டு வருகின்றன. கொச்சி நகர உள்ளூர் அரசு அதிகாரிகளால் இந்த ஆலை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், ANI
சென்ற வாரம் ஏற்பட்ட இந்த தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்
இதுகுறித்து அதன் அதிகாரிகள் கூறும்போது, “இந்த மாதங்களில் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமானதுதான் எனவும், இதற்கு அதிகளவிலான வெயிலால் உருவாகும் வெப்பம்தான் காரணமெனவும்” தெரிவிக்கின்றனர். அதேசமயம் குப்பை கிடங்களில் ஏற்படும் இது போன்ற தீ விபத்துகளாலும், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதாலும் தங்களது உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரம்மபுரம் கழிவு மேலாண்மை ஆலை தீ விபத்து, எதனால் ஏற்பட்டது என்பது குறித்த எந்த தெளிவான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தீயணைப்பு வீரர் ஒருவர், “குப்பைகளுக்கு அடியில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியை தாமதப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள நச்சுப் புகை, தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு, குமட்டல் மற்றும் தலை சுற்றலை ஏற்படுத்தி வருகிறது. நச்சுப் புகையால் பாதிக்கப்பட்டு இதுவரை 20 தீயணைப்பு வீரர்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
“பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் வசித்து வரும் முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னைகள் உடையவர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு” அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
“நகரின் அனைத்து மருத்துவமனைகளிலும் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்காக சிகிச்சை அளிப்பதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், ஆனால் இதுவரை தீவிரமான சுவாசக் கோளாறு பிரச்னைகளால் யாரும் பாதிக்கப்படவில்லை ” எனவும் வீனா ஜார்ஜ் குறிப்பிடுகிறார்.
கொச்சி நகர காவல் துறை அதிகாரிகள், இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அம்மாநில மாசுக் கட்டுபாட்டு வாரியம், விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள உள்துறை அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்ற தவறியதற்காக , அவர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: