கரூர்: கல்விக்கும், மருத்துவத்துக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கரூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு ரூ.267 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்த ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் முன்னிலை கொடுக்கப்பட்டு வருகிறது.
இதே போல், புதுமைப் பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப் பெண் திட்டமாக கொண்டு வந்து, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துகின்றோம். இதனால், கல்லூரிகளுக்கு வரும் மாணவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இது நெசவாளர் நிறைந்த மாவட்டம் என்பதால் பதிவு செய்கிறேன். விசைத்தறி நெசவாளர்களுக்கு கலைஞர் ஏற்கனவே, 500 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பதை அறிவித்துள்ளார்.
அதில், தேர்தல் வாக்குறுதியின்படி நம் முதல்வர், 500யூனிட்டை 1000ம் யூனிட்டாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதே போல், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட 250 யூனிட் இலவச மின்சாரத்தை 50 யூனிட் அதிகரித்து 300 யூனிட்டாக உயர்த்தியுள்ளார். நாங்கள் என்றும் மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறோம். தேர்தல் வாக்குறுதியில் கூறிய பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. தேர்தல் சமயத்தில் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் தலைவர் 100 சதவீதம் செய்து முடிப்பார்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநகராட்சி மேயர் கவிதா, எல்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம் ஆகியோர் பேசினர். கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.