டாப் 4 வீராங்கனைகளில் யாரோ இருவர் தவறாமல் பெர்ஃபார்ம் செய்து விடுவதை எப்போதுமே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அது இந்த இறுதிப்போட்டியிலும் தொடர்ந்திருந்தது. தென்னாப்பிரிக்க அணியிலும் வோல்வார்ட் அரைசதம் கடந்து பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தார். ஆனால், அவரால் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை. 17வது ஓவரிலேயே அவுட் ஆகினார். பந்துவீச்சை எடுத்துக் கொண்டாலும் தென்னாப்பிரிக்கவை விட ஆஸ்திரேலியாவிற்கு கூடுதல் ஆப்ஷன்கள் இருக்கவே செய்தன. மொத்தம் 7 பௌலர்களை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தியிருந்தது. கேட்ச் ட்ராப்களையும் இந்தத் தொடர் முழுவதிலும் பெரிதாக காண முடியவில்லை. உலகக்கோப்பை வெற்றிக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் சரிவிகிதத்தில் கொட்டி படைக்கப்பட்ட பெரும் விருந்தாகத்தான் ஆஸியின் பெர்ஃபார்மென்ஸ் அமைந்திருந்தது.
ஆறு உலகக்கோப்பை வெற்றிகளில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை மூன்று முறையும் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை தலா ஒரு முறையும் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா வீழ்த்தியது அனைத்துமே டாப் அணிகள்தான். இறுதிப்போட்டியில் அத்தனை அழுத்தங்களையும் தாண்டி இப்படி முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதெல்லாம் அசாத்தியம்.
“உங்களின் சிரிப்பைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ஆனால், நீங்கள்தான் இந்தப் பெண்கள் கிரிக்கெட்டுக்கான முன்னுதாரணம். உங்களின் வெற்றிக்கு வாழ்த்துகள்” என தென்னாப்பிரிக்க கேப்டன் சுனே லூயிஸ் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் குறித்து பேசியிருக்கிறார். சுனே லூயிஸின் வார்த்தைகள் நிஜமானவை. இந்த ஆஸ்திரேலிய அணியைப் பிடிக்காவிட்டாலும் அவர்களைப் புறந்தள்ளிவிடவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டுக்கான பெரிய இன்ஸ்பிரேஷன் இந்த அணி!