வெலிங்டன் டெஸ்ட் | 7 விக்கெட்களை இழந்து நியூஸிலாந்து திணறல் – பாலோ-ஆன் தவிர்க்க 97 ரன்கள் தேவை | Wellington Test | New Zealand stutter by 7 wickets – need 97 runs to avoid follow-on

Share

வெலிங்டன்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 435 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 138 ரன்களுக்கு 7 விக்கெட்களை தாரைவார்த்தது. பாலோ-ஆனை தவிர்க்க அந்த அணிக்கு மேற்கொண்டு 97 ரன்கள் தேவையாக உள்ளது.

வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 குவித்தது. ஸாக்கிராவ்லி 2, ஆலி போப் 10, பென்டக்கெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஹாரி புரூக், ஜோ ரூட் ஜோடி அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹாரி புரூக் 184, ஜோ ரூட் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 87.1 ஓவரில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 435 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 176 பந்துகளில், 24 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 186 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் இணைந்து 302 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27, பென் ஃபோக்ஸ் 0, ஸ்டூவர்ட் பிராடு 14, ஆலி ராபின்சன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 224 பந்துகளில், 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 153 ரன்களும், ஜேக் லீச் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 4, மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. டேவன் கான்வே 0, கேன் வில்லியம்சன் 4, வில் யங் 2 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் நடையை கட்டினர்.சற்று தாக்குப்பிடித்து விளையாடிய டாம் லேதம் 35, ஹென்றி நிக்கோல்ஸ் 30, டேரில் மிட்செல் 13 ரன்களில் ஜேக் லீச்சின் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அதிரடி வீரரான மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன்னில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 103 ரன்களுக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் டாம் பிளண்டல், கேப்டன் டிம்சவுதி ஜோடி நிதானமாக விளையாடியது.

நியூஸிலாந்து அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 138ரன்கள் எடுத்திருந்த போது மழைகுறுக்கிட்டது. தொடர்ந்து போட்டியை நடத்த முடியாததால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. டாம் பிளண்டல் 25, டிம் சவுதி 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ்ஆண்டர்சன், ஜேக் லீச் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

கைவசம் 3 விக்கெட்கள் இருக்க297 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது நியூஸிலாந்து அணி. பாலோ-ஆனை தவிர்க்க வேண்டுமென்றால் நியூஸிலாந்து அணியானது மேற்கொண்டு 97 ரன்கள் சேர்க்க வேண்டும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com