Doctor Vikatan: தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா?

Share

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா?

Doctor Vikatan: குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகின்றன. அடுத்த மாதம் நான் வேலையில் சேர வேண்டும். தாய்ப்பாலை நிறுத்த விரும்புகிறேன். தாய்ப்பாலை நிறுத்த மாத்திரைகள் எடுத்தால் மார்பக அளவு சுருங்கும் என்பது உண்மையா? மார்பகங்களில் பால் கட்டாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

தாய்ப்பால் சுரப்பை நிறுத்துவதற்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் மார்பக அளவு சுருங்காது. தாய்ப்பால் கொடுப்பதை முற்றிலும் நிறுத்திவிட்ட பிறகு, மார்பகங்கள் பேறுகாலத்துக்கு முந்தைய அளவுக்குத் திரும்பும் அல்லது வழக்கமான அளவிலேயே இருக்கும்.

மார்பக அளவில் ஏற்பட்ட மாற்றமானது உங்கள் உணவு, மரபியல், கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடை போன்றவற்றைப் பொறுத்தது.

மார்பகங்களில் பால் கட்டாமலிருக்க, அந்தப் பாலை எடுத்துவிட வேண்டும். அதன் பிறகு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். முட்டைகோஸ் இலைகள் அல்லது மல்லிகைப் பூக்களை மார்பகங்களின் மேல் வைத்துக் கட்டுவதுகூட பால் சுரப்பைக் குறைக்க உதவும்.

தாய்ப்பாலை நிறுத்துவதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும் சில நாள்களுக்கு பால் கட்டும் பிரச்னை லேசாக இருக்கும். ஆனால் அது ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மருந்துகள் எடுக்க ஆரம்பித்த பிறகு மார்பகங்களில் கட்டிய பாலை அடிக்கடி வெளியேற்ற வேண்டாம். அது பால்கட்டுப் பிரச்னையை அதிகப்படுத்தும்.

newborn baby with mother

உங்கள் குழந்தைக்கு 8 மாதங்கள்தான் ஆகின்றன என்கிறீர்கள். எனவே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில், நீங்கள் தாய்ப்பாலைச் சேகரித்து வைத்துவிட்டுச் செல்லலாம். குழந்தையைப் பார்த்துக்கொள்ளப் போகிறவர், அந்தப் பாலை குழந்தைக்குப் புகட்டலாம்.

இப்படிச் சேகரிக்கும் தாய்ப்பாலை, அறை வெப்பநிலையில் 6 மணி நேரம் வரை வைத்திருந்து, குழந்தைக்குக் கொடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com