
பெண்களின் பிறப்புறுப்பில் மரு வருவதுபற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். இதை ‘ஜெனிட்டல் வார்ட் (Genital Wart)’ என்போம்.

இதற்கு, ஹெச்.பி.வி. எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்தான் காரணம். இந்த வைரஸ் பாதிப்புள்ள நபருடன் உறவு கொள்ளும்போது மட்டுமே அடுத்தவருக்குப் பரவும். 99 சதவிகிதம் இப்படித்தான் நிகழும்.

அரிதிலும் அரிதாக, பெண்ணுறுப்பில் மரு இருப்பவர்கள் பயன்படுத்திய டவலை, அடுத்தவர் பயன்படுத்தினால், அவர்களுக்கும் ‘ஜெனிட்டல் வார்ட்’ வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக அந்த டவலில் பட்ட மருவின் திரவம் காய்வதற்குள் பயன்படுத்தினால் தொற்று நிச்சயம் பரவும்.

இந்த மருவைக் கிள்ளக்கூடாது. கிள்ளினால், இதிலிருந்து வெளிவருகிற திரவம் பட்டு பெண்ணுறுப்பு முழுக்கத் தொற்றுப் பரவும்.

இந்த மரு குறித்து பொதுவாக பயப்படத் தேவையில்லை. சருமத்தில் இருக்கிற செல்களின் அசாதாரண வளர்ச்சிதான் இது. மரு சிறிதாக இருந்தால் பிரச்னையில்லை.

பெரிதாகிக்கொண்டே போனால், சரும மருத்துவரை அணுகி, அதற்கென இருக்கிற க்ரீமை பயன்படுத்தினால் சரியாகி விடும். இந்த க்ரீம் நார்மல் சருமத்தில் பட்டால் புண்ணாகிவிடும். க்ரீம் பயன்படுத்த அச்சப்படுபவர்கள், மருத்துவர் உதவியுடன் மருவை பொசுக்கியும் எடுத்து விடலாம்.

இதே வைரஸ்தான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கும் காரணம் என்பதால், பிறப்புறுப்பில் மரு வந்தவர்கள் மருத்துவரை சந்தித்து `பாப் ஸ்மியர்’ என்னும் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பரிசோதனையின் மூலம், கர்ப்பப்பை வாய்ப்பகுதியின் செல் அமைப்பு சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். செல் அமைப்பு சரியாக இருக்கும்பட்சத்தில், இந்த மரு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.