ஃபுளோரிடாவில் இருக்கிற கருக்கலைப்புத் தடை சட்டத்தால், அம்மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தையின் மரணத்தைக் கண்ணெதிரே பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ளமா காணங்களில் ஒன்று ஃபுளோரிடா. இங்கு வசித்து வருகிறார்கள் டெபோரா டோர்பர்ட் மற்றும் லீ டோர்பர்ட் தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தையிருக்க, தற்போது இரண்டாவது முறையாக கருத்தரிக்கிறார் டெபோரா. சென்ற வருடம் நவம்பர் மாதம் கருவின் வளர்ச்சி நிலையைத் தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்து பார்த்தபோது, கருவிலுள்ள குழந்தையின் சிறுநீரகங்கள் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்தக் குழந்தை பிறந்தால் அதன் சிறுநீரகங்களால் உடலில் உருவாகிற கழிவுகளை வெளியேற்ற முடியாது; கூடிய விரைவில் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் என்பதுதான் நிலைமை. தவிர, கர்ப்பப்பைக்குள் நீரின் அளவு குறைவாக இருப்பதால், குழந்தையால் மூச்சு விடவும் முடியாத நிலைமை. இதை பாட்டர் சிண்ட்ரோம் (Potter syndrome) என்பார்கள். இந்தப் பிரச்னை இருக்கிற சிசுக்கள் பெரும்பாலும் தாயின் வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடலாம் அல்லது பிறந்த சில நிமிடங்களில் அல்லது சிலமணி நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடையலாம்.
கருவிலிருக்கிற சிசுவின் நிலையை அறிந்துகொண்ட பெற்றோர், உடனடியாக கருவைக் கலைப்பது என முடிவு செய்தனர். மருத்துவரும், ‘கருக்கலைப்பு செய்யலாம். ஆனால் 28-வது வாரத்திலிருந்து 32-வது வாரம் வரைக்கும் கருவைக் கலைக்க முடியாது’ என அறிவுறுத்தியிருக்கிறார்.