Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பின் எத்தனை நாள்கள் கழித்து இயல்பு வாழ்க்கை சாத்தியம்? தாம்பத்திய உறவு கொள்வதில் சிக்கல் வருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சுமித்ரா சுந்தர் ராமன்.
லேப்ராஸ்கோப்பி முறையிலோ, வயிற்றைத் திறந்து செய்யும் முறையிலோ, எப்படி இந்த அறுவை சிகிச்சையைச் செய்திருந்தாலும், சில நாள்களுக்கு களைப்பும், பலவீனமும் நிச்சயம் தொடரும். உங்கள் உடலிலிருந்து ஓர் உறுப்பு நீக்கப்பட்டிருக்கிறது. அதனால் கை, கால்களில் வலியும் சோர்வும் நிச்சயம் இருக்கும்.
எனவே மருத்துவர் உங்களுக்கு குறைந்தது 6 வாரங்களுக்காவது ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருப்பார். அதன் பிறகு நீங்கள் உங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். நடப்பது, சமைப்பது என எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கலாம். அறுவை சிகிச்சையில் தையல் போடப்பட்டிருக்கும் என்பதால் முதல் 6 வாரங்களுக்கு குனிந்து நிமிர்ந்து எந்த வேலையும் செய்ய வேண்டாம். அதிக பளு தூக்க வேண்டாம். தையல் விட்டுப்போக வாய்ப்பிருப்பதே காரணம். குறிப்பாக கர்ப்பப்பையை நீக்கியபிறகு வெஜைனா பகுதியில் போடப்படும் தையல் பலமிழக்க வாய்ப்புண்டு.