இவை தவிர சைனஸ் பிரச்னை, மூளையில் உள்ள ரத்தக் கட்டி, இதய பாதிப்புகள், மூளையில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றாலும் தலைவலி வரலாம். எனவே, கர்ப்பகாலத்தில் தலைவலி வந்தால், முதலில் அதற்கான காரணத்தை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். செகண்டரி தலைவலிக்கான காரணங்களில் ஏதேனும் இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட வேண்டும்.
கர்ப்பத்துக்கு முன்பும் தலைவலி பாதிப்பு இருந்து, அது கர்ப்பத்திலும் தொடர்கிறது என்ற நிலையில், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது, ஓய்வு, மசாஜ் போன்றவை உதவும்.
தலைவலியுடன் காய்ச்சலோ, வாந்தி, மயக்கமோ இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பார்வை மங்குதல், வலி தீவிரமாவது, வலி அதிகரித்து மயக்கம் வருவது, நீண்ட நேரம் வலி, அடிக்கடி வலி போன்ற நிலைகளில் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் உங்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவுகளைப் பரிசோதிப்பதுடன், கண்களையும் டெஸ்ட் செய்வார். தேவைப்பட்டால் ஸ்கேன் எடுத்தும் பிரச்னைக்கான காரணத்தை உறுதிசெய்வார்.
பாராசிட்டமாலை தவிர வேறு மருந்துகள் எடுக்க வேண்டாம். மருத்துவரின் அறிவுரையின்றி நீங்களாகவே மருந்துக் கடைகளில் தலைவலி என்று சொல்லி மாத்திரை வாங்கிச் சாப்பிட வேண்டாம். ஏனெனில், அப்படி நீங்கள் எடுக்கும் மருந்துகளில் சில வயிற்றிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.