கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்த நாடார் பகுதியில் வசிப்பவர் அய்யாவு. கூலிவேலை செய்துவருகிறார். இவர் தன் மனைவி, மகன் பார்த்தசாரதி, இரண்ட மகள்களுடன் வசித்துவருகிறார். அய்யாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவரது குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. நேற்று தமிழ்ச்செல்வன் வீட்டினருக்கும் அய்யாவின் குடும்பத்தினருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி மல்குஜா ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்துவதற்காக சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்லால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு சுதாகரன் உள்ளிட்டோர் நேற்று இரவு 8:30 மணி அளவில் அய்யாவுவின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.
வீட்டில் அய்யாவு, அவர் மனைவி, மகன் பார்த்தசாரதி, இரண்டு மகள்கள் இருந்திருக்கின்றனர். வீட்டில் விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் அய்யாவின் மகன் பார்த்தசாரதியை போலீஸில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், வீட்டிலிருந்த அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால், அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல போலீஸார் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அய்யாவுவின் குடும்பத்தினர் ஐந்து பேரும் சேர்ந்து போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் அய்யாவு உட்பட குடும்பத்தினர் 5 பேரும் சேர்ந்து போலீஸாரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.