ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் செல்வாக்கை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் எடப்பாடி அணி: தேர்தல் பிரசாரம் செய்யாமல் வேடிக்கை பார்க்க ஓபிஎஸ் முடிவு

Share

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பிரசாரம் செய்யாமல் வேடிக்கை பார்க்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் எடப்பாடி அணியினர் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், தடுமாற்றத்திலும் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 4ம் தேதி காலமானார். இதையடுத்து வருகிற 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இப்படி இரண்டு பேரும் தனித்தனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழ்நிலை உருவானது. இந்த பிரச்னை நீதிமன்றத்துக்கு சென்றது. இதற்கு இடையே பாஜகவும் இதில் பஞ்சாயத்து செய்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், அதிமுக சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். நீதிமன்றமும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் திடீரென தனது அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில்முருகனை போட்டியில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தென்னரசுவுக்கு பெரும்பாலான அதிமுக வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் இறுதி நாளான கடந்த 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், எடப்பாடி அணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்த நட்சத்திர பட்டியலை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் அணி வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டாலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு  ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்வோம் என்று அறிவித்து இருந்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்றே கருதப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், அதிமுகவினர் இரண்டு அணியாக செயல்படாமல் ஒற்றுமையாக செயல்படலாம் என்று ஓபிஎஸ் பலமுறை கோரிக்கை விடுத்தும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தை எக்காரணம் கொண்டும் இனி அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்து வருவதுடன், இரண்டு அணிகளையும் பஞ்சாயத்து செய்து, ஒருங்கிணைக்க முயற்சி செய்த பாஜக தலைவர்களிடமும் எடப்பாடி அணியினர் ஓபிஎஸ்சை எக்காரணம் கொண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தால் தங்களுக்கு மரியாதை இருக்காது என்றே ஓபிஎஸ் அணியினர் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும், இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினரை தனித்துவிடவும் ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டுள்ளனர். அப்படி தனித்து விட்டால்தான், எடப்பாடியின் உண்மையான செல்வாக்கு அதிமுகவினருக்கும், பொதுமக்களுக்கும் தெரியவரும் என்று ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், ‘கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் யுவராஜ் போட்டியிட்டு திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவிடம் தோல்வி அடைந்தார். அதன்படி தமாகா வேட்பாளர் யுவராஜ் மொத்தம் 58,396 வாக்குகள் வாங்கினார். அதேநேரம் 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தென்னரசு 64,879 வாக்குகள் வாங்கி, 2வது இடம் பிடித்த திமுக கூட்டணி வேட்பாளரை விட 7,794 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் தற்போது எடப்பாடி அணி சார்பில் தென்னரசு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். எப்படி பார்த்தாலும் ஆளுங்கட்சி ஆதரவுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஜெயிக்க முடியாது. அதேநேரம், கடந்த 2021ம் ஆண்டு அதிமுக கூட்டணி கட்சியான தமாகா வாங்கிய 58,396 வாக்குகளைவிட அதிகம் வாங்கி உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி அதிகம் வாங்கினால்தான் எடப்பாடி பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட மதிப்பார்கள்.

ஆனால், குறைந்த வாக்குகள் பெற்று தென்னரசு தோல்வி அடைந்தால் எடப்பாடியிடம் தற்போதுள்ள அதிமுக நிர்வாகிகளே சிதறி ஓடி விடுவார்கள். தற்போது அதிமுகவில் எடப்பாடியை தவிர பெரிய பேச்சாளர்கள் இல்லாததால் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால்தான், தற்போதைய இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளனர்’ என்றனர்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அதிமுகவின் இன்னொரு பிரிவான டி.டி.வி.தினகரனும், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியில்லை என்று அறிவித்து விட்டார். அதனால் அவரும் பிரசாரம் செய்ய மாட்டார். தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று நிரூபிக்க அங்கு அதிக வாக்குகள் வாங்க வேண்டிய கட்டாயம் மற்றும் தடுமாற்றத்திற்கு எடப்பாடி அணியினர் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி வாங்காமல், குறைந்த அளவுக்கு ஓட்டு வாங்கி, தென்னரசு தோல்வி அடைந்தால், எடப்பாடியின் பதவி பேராசையால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் குற்றச்சாட்டு கூறும் நிலை ஏற்படும். இதுபோன்ற பிரச்னையில் இருந்து எடப்பாடி அணியினர் கரை தேறுவார்களா? என்பது மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.

ஓ.பன்னீர்செல்வத்தை எக்காரணம் கொண்டும் இனி அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்து வருவதுடன், இரண்டு அணிகளையும் பஞ்சாயத்து செய்து, ஒருங்கிணைக்க முயற்சி செய்த பாஜக தலைவர்களிடமும் எடப்பாடி அணியினர் ஓபிஎஸ்சை எக்காரணம் கொண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com