சளி, காய்ச்சல் என்றாலோ, உடல் எடையைக் குறைக்கவோதான் நம்மில் பெரும்பாலானோர் வெந்நீர் அருந்துகிறோம். ஆனால், உடல்நலனை பாதுகாக்க உதவுவதில் வெந்நீருக்கு முக்கியப் பங்கு உள்ளது.
காய்ச்சல் என்று வந்துவிட்டாலே, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெந்நீர் குடிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். வெந்நீர், வெறும் நோய்க்கிருமிகளிடம் இருந்து மட்டும் நம்மை பாதுகாப்பதில்லை. இது, உணவு செரிமானம், சீரான ரத்த ஓட்டம், மலச்சிக்கல் பிரச்னை வரை நமக்கு தீர்வுகளைத் தருகிறது. தினமும் வெந்நீர் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக் காண முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். வெந்நீர் அருந்துவதால் உடல்நலன் எவ்வாறு மேம்படுகிறது என்பது குறித்து இயற்கை மருத்துவர் தீபா சொல்வதென்ன?
`பொதுவாக தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசிய மானது. வளர்சிதை மாற்றங்களில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் மூன்று லிட்டரை தண்ணீராகவும், மீதமுள்ள அரை லிட்டரை பழங்கள் அல்லது நீர் சார்ந்த உணவுப் பொருள்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் நாள் முழுக்கத் தண்ணீர் அருந்தாமலோ, குறைந்தளவு மட்டுமே தண்ணீர் எடுத்துக்கொண்டாலோ அவருக்குக் கண்ணெரிச்சல், தலைவலி, தொண்டை வறட்சியில் தொடங்கி உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration) மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமான கட்டத்துக்குச் செல்லக் கூடும்.