கர்நாடக மாநிலத்தில், நெஞ்சு வலிப்பதாகக் கூறிய 12 வயது ஆறாம் வகுப்பு சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்துள்ள செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மடிகேரி மாவட்டத்தில் உள்ள குடமங்களூரில் வசித்து வருபவர் மஞ்சச்சரி. இவர், அருகேயுள்ள பள்ளியில் வாகன ஓட்டுநராக உள்ளார். அவரின் 12 வயது மகன் கீர்த்தன் அதே பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை மாலை, தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளான் கீர்த்தன்.
சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறிய கீர்த்தனை, குடும்பத்தினர் உடனடியாக குஷால்நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயம் தொடர்பான பிரச்னையால் சிறுவன் இறந்ததை அறிந்து, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்; திடீர் மரணத்தை தாங்க முடியாமல் உறவினர்கள் கதறியழுதனர். சிறுவன் கீர்த்தனின் எதிர்பாராத மரணம், அந்தக் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.