செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.
“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து நான் விழிப்புணர்வூட்டிக்கிட்டு வர்றேன். ஆனா, நான் டாக்டரே இல்லை என்பதுபோல் பரப்பிவருகிறார்கள். நான், சென்னையிலுள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில்தான் பி.எஸ்.எம்.எஸ் எனப்படும் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்துள்ளேன். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்தா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். எனது பதிவு எண் போட்டு யார் வேண்டுமானாலும் பரிசோதித்துக்கொள்ளலாம். நான், சித்த மருத்துவத்தில் என்ன படித்தேனோ அதைத்தான் யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பேசிவருகிறேன்.
சித்த மருத்துவத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ‘நோயில்லா நெறி’ என்ற புத்தகத்தில் ‘மாட்டு இறைச்சியால் சகல நோயும் வரும்’ என்று உள்ளது. எனது பாடத்தில் படித்ததைத்தான், நானும் கூறினேன். உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆட்டு இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். பலரும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யுறோம். அதனாலதான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேன். அவர்களும் மாட்டுக்கறி குறித்துதான் கேள்வி கேட்டார்கள். இதுக்குப்போயி, என்னை பாஜகவோட தொடர்புபடுத்தி விமர்சிக்கிறாங்க. நான், ஒரு மருத்துவராத்தான் பேசுறேன். ஏன், என்னை பாஜக 4ட இணைச்சு பேசணும்?