அமெரிக்காவின் முதல் மனித விண்வெளிப் பயணமான நாசாவின் மெர்குரி திட்டத்தில் முக்கிய கணிதவியலாளராகப் பணியாற்றிய கேத்தரின் ஜான்சன், விண்கலம் செல்லும் பாதை, ஏவுதள நேரம் மற்றும் அவசரகாலத் திரும்பும் வழிகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு நாசாவுக்கு உதவினார். 1961-ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் பயணத்திற்கான பாதையை இவர் வெற்றிகரமாகக் கணக்கிட்டார்.
உலகைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜான் கிளென், தன்னுடைய விண்கலத்தின் மின்னணு கணினி கணிப்புகளை நம்ப மறுத்தார். அவர் கேத்தரின் ஜான்சனை நேரில் அழைத்து, காகிதத்தில் மின்னணு கணினி செய்த கணக்கீடுகளைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டார். ” நீங்கள் சரி என்று சொன்னால் மட்டுமே நான் பறப்பேன்” என்று கூறி கேத்தரின் மீது முழு நம்பிக்கை வைத்தார். விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டால், விண்வெளி வீரர்கள் பத்திரமாகப் பூமிக்குத் திரும்புவதற்கான அவசரகால வழிகளையும் கேத்தரின் வரைபடமாக்கினார்.
1969ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சாட்டர்ன் V ராக்கெட் மூலம் அப்பல்லோ 11 விண்ணில் செலுத்தப்பட்டது. மிஷன் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் இப்பயணத்தை மேற்கொண்டனர். ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் ‘ஈகிள்’ (Eagle) தரை இறங்கு கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற அழியாப் புகழைப் பெற்றார்.
விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்டு நிலவைச் சென்றடைவதற்கான சரியான சுற்றுப்பாதை மற்றும் நேரத்தை (Launch Window) கேத்தரின் ஜான்சன் துல்லியமாகக் கணக்கிட்டார். நிலவைச் சுற்றி வந்த கமாண்ட் மாடல் (Command Module) விண்கலத்தையும், நிலவில் தரையிறங்கிய லூனார் லேண்டர் (Lunar Module) விண்கலத்தையும் தங்களுக்குள் ஒத்திசைக்கச் செய்வதற்கான முக்கியக் கணக்கீடுகளை அவர் வெற்றிகரமாகச் செய்தார்.