அஸ்தமனமான சன்ரைசர்ஸ்; சம்பவத்தை நிகழ்த்திய சூர்யவன்சி! – எப்படி வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்?

Share

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபயர் – 2-க்கு முன்னேறியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸுக்கு இடையிலான அந்தப் போட்டிதான் இறுதிச் சுற்றில் ஆர்சிபியோடு கோப்பைக்காக மோதப் போவது யார் என்பதை இறுதி செய்யும்.

RR vs SRH
RR vs SRH

ஒரு சதத்துக்கான கொண்டாட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட அதைத் தவறவிடும் தருணம் உண்டாக்கும் நிசப்தம் கனமானது. வைபவ் சூர்யவன்சியின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வரும் போது இருதரப்பு ரசிகர்களையும் ஏன் எதிரணி வீரர்களையும்கூட மௌனம் கவ்வியதைப் பார்க்க முடிந்தது.

ப்ளே ஆஃப்பின் அடுத்த கட்டத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேறுமா என எதிர்பார்த்தவர்களை விட யுனிவர்சல் பாஸ் க்ரிஸ் கெய்லின் ஒரே சீசனில் 59 சிக்ஸர்களை அடித்த சாதனையை இந்த பேபி பாஸ் முறியடிப்பாரா என்ற ஆவல்தான் பலரிடத்திலும் மேலிட்டது. அதனை சந்தித்த 15 பந்துகளுக்குள் செய்து காட்டி விட்டார் சூர்யவன்சி. கெய்ல் நிகழ்த்தி 14 ஆண்டுகள் நீடித்த சாதனை 15 வயதே நிரம்பிய சூர்யவன்சியால் மிக எளிதாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இது கொண்டாடப்படுவதற்கான மிக முக்கிய காரணம், 59 சிக்ஸர்களை அடிக்க கெய்லுக்கு அப்போது 456 பந்துகள் தேவைப்பட்டிருந்தன. ஆனால் சூர்யவன்சிக்கோ வெறும் 263 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது என்ற தரவு தான்.

பௌலர்களை அவர் துவைத்த விதத்தை பார்த்த போது, “It Is Sooryavanshi’s Fantasy World, All The Bowlers Are His Toys” என்று தான் தோன்றியது. அந்தளவிற்கு அவரது தாக்கம் நிறுத்தமேயின்றி நீடித்தது. ஃபுல் லெந்த் மற்றும் யார்க்கர் மட்டும்தான் இவரை சற்றேனும் கட்டுப்படுத்தும் என்பதால் கம்மின்ஸ் ஃபுல் லெந்தில் வீச, அது தப்பித்தவறி ஸ்லாட்டில் சிக்கினாலும் சிக்ஸருக்குப் பறந்தது. சரி என அவர் ஷார்ட் பாலுக்கோ ஸ்லோ பாலுக்கோ மாறினால் அப்போதும் சிக்ஸர் தான்‌. “மிகப்பெரிய கூட்டத்தை அமைதியாக்குவது” பற்றி எப்போதோ கம்மின்ஸ் சொன்னது ஞாபகம் வந்ததோ என்னவோ அதற்கு பழி தீர்த்தது போல் கம்மின்ஸை ஹாட்ரிக் சிக்ஸரோடு அட்டாக் செய்தார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

கம்மின்ஸ் மட்டுமல்ல ஈஷன் மலிங்கா, ஷாகிப் ஹுசைன் என எல்லோருக்கும் அதே நிலைதான். குறிப்பாக அதிக அன்போடு ப்ரஃபுல் ஹிங்கேயை சூர்யவன்சி தாக்கிய அந்த 29 ரன்கள் ஓவர் ப்ரஃபுல் ஹிங்கேயை மனதளவில் உடைத்திருக்கும். சூர்யவன்சியின் விக்கெட்டை வீழ்த்திய பின் ஹிங்கே அதனைக் கொண்டாடியதைப் பற்றி கூட விமர்சனங்கள் எழுந்துள்ளன. 29 ரன்கள் வந்த அந்த ஓவரில் உள்ளே ஒளித்து வைக்கப்பட்ட ஆக்ரோஷம் தான் விக்கெட் வீழ்ந்த போது வெடித்து வெளிப்பட்டிருந்தது. எந்த லெந்தில், எந்த லைனில் போட்டாலும் பந்து அடிவாங்கும் எனும் பட்சத்தில் ஒரு பௌலரால் என்னதான் செய்ய முடியும்? காட்டாறாக முன்னேறி சூர்யவன்சி அடித்த அந்த 16 பந்துகள் அதிவேக அரைசதம் ராஜஸ்தான் ராயல்ஸின் ராஜ்ஜியத்தை அந்தத் தருணத்திலேயே சண்டிகரில் கட்டமைத்து விட்டது.

ப்ளாட் பிட்ச் தான், பேட்ஸ்மேனை தாலாட்டி சீராட்டியது தான், ஆனால் 29 பந்துகளில் 97 ரன்களை சூர்யவன்சி எடுத்த அதே பிட்சில் ஆடி, அதே பௌலர்களை சந்தித்துதான் 29 பந்துகளில் வெறும் 29 ரன்களை இன்னொரு ஓப்பனரான ஜெய்ஸ்வாலும் எடுத்திருந்தார் என்பதை மறக்கக் கூடாது. சூர்யவன்சி தந்த அதிகபட்ச வெளிச்சத்தில் மறைந்து போயிருந்தாலும் 21 பந்துகளில் 50 ரன்களை அடித்த ஜுரேலின் இன்னிங்க்ஸும் மிக அற்புதமானதுதான்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

சூர்யவன்சி மற்றும் ஜுரேல் எடுத்திருந்த ரன்களான 147 ரன்களைக் கழித்துப் பார்த்தால் வெறும் 96 ரன்கள் மட்டுமே 70 பந்துகளில் மற்ற ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களால் கூட்டாக அடிக்கப்பட்டு இருந்தது. அதிலும் இறுதி ஐந்து ஓவர்களில் வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்து, சூர்யவன்சியால் வேற்றுலகுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரசிகர்களை “Welcome Back To Reality” என கூட்டாக வரவேற்று நிஜ உலகிற்கு கொண்டு வந்திருந்தனர் ராஜஸ்தானின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் .

இது மட்டுமல்ல ப்ளே ஆஃப் வரலாற்றிலேயே அதிக இலக்கான குவாலிஃபயர் 1-ல் ஆர்சிபி அடித்திருந்த 254 ஸ்கோரை பின்னுக்குத் தள்ளி அப்பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புக்கும் `நோ தேங்க்ஸ்’ சொல்லிச் சென்றிருந்தனர்.

இருப்பினும் ப்ளே ஆஃப் வரலாற்றில் எட்டப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை இந்த 243 நிகழ்த்தி இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் சூர்யவன்சியின் இன்னிங்க்ஸ்.

அவர் விளையாடும் விதம் மட்டுமல்ல பந்தை அடிக்கும் போது அவரது கண்களில் தென்படும் வேட்கையும், முகத்தில் தென்படும் அந்த உறுதியும்தான் பலரையும் அவரை நோக்கி வசீகரிக்கின்றன. `Passion Personified’ என தயக்கமேயின்றி சொல்லலாம். கெய்லின் அதிவேக சதத்துக்கான (35 பந்துகள்) சாதனையை உடைக்கும் வாய்ப்பை நூலிழையில் சூர்யவன்சி தவற விட்டிருக்கிறார். எதிர்காலத்தில் அதுவும் நிகழலாம், இவ்வளவு ஏன் கெய்லின் 175 ரன்கள் சாதனை கூட சூர்யவன்சியால் முறியடிக்கப்படலாம். அது மட்டுமல்ல யுவ்ராஜ் சிங்கின் அதிவேக அரைசதம் மற்றும் ஆறு சிக்ஸர்கள் ஓவர்கள் என எல்லாவற்றையும் மீட்டுருவாக்கம் செய்யும் திறன் அவரிடம் இருக்கிறது.

RR
RR

எத்தனை முறை கை நழுவிப் போனாலும் ஆரஞ்சுக் கேப்பினை ரன் வேட்டையாடி மீண்டும் அவர் தனதாக்குவதே அதற்கான சான்றுதான்.

இது பெரிய சவால் அல்ல இரட்டைத் தலைவலி தரும் எத்தகைய கடின இலக்கையும் எட்டுவதற்கு எளிதாக்கும் இரட்டையர்கள் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் ஷர்மாவால் இதனையும் அடிக்க முடியுமென்பதே பலரது நம்பிக்கையும். ஆனால் அது நிகழ விடாதவாறு ஆர்ச்சரின் பவுன்சர் அபிஷேக்கை வெளியேற்றியது.

ப்ளே ஆஃப்களில் மோசமாக ஆடும் அபிஷேக்கின் வழமை இப்போட்டியிலும் மாறவில்லை. அவர் ஆட்டமிழந்த பின்னும்கூட இஷான் – ஹெட் அதிரடி தொடர்ந்தது. 15 பந்துகளில் 51 ரன்கள் என திரும்பத் திரும்ப ஸ்கோரை சரிதானா என பரிசோதிக்கும்படியான பார்ட்னர்ஷிப்பை இருவரும் இணைந்து கட்டமைத்திருந்தனர்.

ஆனால் திகில் படக் காட்சிகள் போல பவர்பிளே முழுவதுமே பந்துக்குப் பந்து ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருந்தன.

அதில் முக்கியமானதாக ஹெட் – இஷான் ஆகிய இருவரது விக்கெட்டுகளையுமே ஆர்ச்சர் வீழ்த்தியது தான் சன்ரைசர்ஸ் இன்னிங்க்ஸின் முடிவுரைக்கான முதல் வரி. சலீல் அரோரா மற்றும் நித்தீஷ் ரெட்டி இணை கொஞ்சமாக ராஜஸ்தானுக்கு தண்ணீர் காட்டியது. 24 பந்துகளில் 56 ரன்களை அதிவேகமாக குவித்து ராஜஸ்தான் வீரர்களின் கண்களில் மரண பயத்தை எட்டிப் பார்க்க வைத்தனர். ஆனால் இந்தப் பார்ட்னர்ஷிப்பையும், சற்று நேரம் நீடித்த சலீல் அரோரா மற்றும் ஷிவாங்க் குமார் பார்ட்னர்ஷிப்பையும் உடைத்து ஆர்ச்சர் தொடக்கத்தில் கொடுத்த தாக்கத்தை ரவீந்திர ஜடேஜா இறுதியில் ஏற்படுத்தினார். ராஜஸ்தானின் வெற்றியும் அங்கேதான் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

RR
RR

சன்ரைசர்ஸை ஆல் அவுட் ஆக்கி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் போட்டிக்குள் குதூகலத்தோடு நுழைந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அதிலும் லீக் சுற்றில் தன்னை இரு முறையும் வீழத்திய ஓர் அணியை எலிமினேட்டரில் வெளியேற்றி உள்ளனர்.

சூர்யவன்சி மற்றும் ஜுரேலின் பேட்டிங், பௌலர்களின் துல்லியமான பௌலிங் ஆகியவற்றால் மட்டுமே இது நடந்திருந்திருக்கிறது, ராஜஸ்தானின் மற்ற பேட்ஸ்மேன்கள் இந்த வெற்றிக்குரிய பங்களிப்பை அளிக்கவில்லை என்பதே உண்மை. அவர்களும் இணைந்து கூட்டாக அடுத்த போட்டியை அணுகினால் மட்டுமே எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் `ஆல்ரவுண்ட்’ அணியான குஜராத்தை வீழ்த்த முடியும்.

ஏனெனில் குஜராத்துக்கு ஒருமுறைதான் துண்டு தவறும்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com