இதனால் களநடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் மேல் முறையீடுக்கு சென்றனர். ஐ.சி.சி-யின் புதிய விதிமுறைப்படி கள நடுவர்கள் சாஃப்ட் சிக்னல் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டதால் கள நடுவர்கள் இங்கே தங்களின் முடிவைச் சொல்லவே இல்லை. மூன்றாம் நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ சில நிமிடங்கள் இந்த கேட்ச்சை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்துவிட்டு ‘அவுட்’ என முடிவு வழங்கினார். இதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. பந்து தரையில் பட்டதா இல்லையா என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியாதபடிதான் கேமரா கோணங்கள் மற்றும் காட்சிகள் இருந்தன.
ஆனால், இங்கே பௌலருக்குச் சாதகமாக முடிவு வழங்கப்பட்டுவிட்டது என சமூக வலைதளங்கள் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மைதானத்திலுமே கூட பெரிய திரையில் ‘அவுட்’ எனக் காண்பிக்கப்பட்ட போது அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கர்கள் ‘Cheater…Cheater…’ என கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. கில்லுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் ரோஹித்துமே நடுவரின் முடிவால் ‘Noooo…’ என விரக்தியான குரலில் கத்தியதோடு கள நடுவரிடமும் இந்த முடிவு சார்ந்து விவாதத்தில் ஈடுபட்டார்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டர்கள் பலருமே கூட தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த முடிவை மூன்றாம் நடுவர் கண்ணைக் கட்டிக்கொண்டு வழங்கியிருக்கிறார் என்கிற தொனியில் முன்னாள் இந்திய வீரர் சேவாக் கேலியோடு விமர்சனம் செய்திருக்கிறார்.