இது தொடர்பாக உலக தடகள கவுன்சில் தலைவர் செபாஸ்டியன் கோ, “உலக தடகள அமைப்பின் தத்துவம் என்பது, பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செய்வதுதான்.
பெண்களை ஈர்க்க முயற்சிக்கும் விளையாட்டுத் துறையில், உண்மையான உயிரியல் சமத்துவம் உள்ளது எனும் நம்பிக்கையுடன் அவர்கள் பங்கேற்பது முக்கியமானது.
உயிரியல் பாலினத்தை உறுதி செய்யும் இந்த பரிசோதனை, இந்த நோக்கத்தை நிறைவேற்ற முக்கியமாகும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு, திருநங்கைகள் தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் பங்கேற்பது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான பதிலாகப் பார்க்கப்படுகிறது .
2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் தலா ஒரு பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யா உட்பட இயற்கையாக அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்ட பாலின வளர்ச்சியில் வேறுபாடு (DSD) உள்ள வீராங்கனைகள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, தங்களின் ஹார்மோன் அளவுகளை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று 2018-ல் அறிவுறுத்தப்பட்டது.
இந்த விதிமுறையை செமென்யா மறுத்ததிலிருந்து தொடங்கி, இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.