தவெக-வின் நான்காம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் இன்று பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். கோஷ்டி பூசல், மெட்ராஸ் பட பாணியிலான சுவர் அரசியல் என தகதகத்த தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் அப்டேட்ஸ் இங்கே.
எப்போதும் மதியம் 12:30 மணியிலிருந்து மதியம் 1:30 க்குள் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த விஜய், இன்றைக்கு 3 மணிக்குத்தான் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். காலை முழுவதும் மத்திய பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அந்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருகை தருவதை விஜய் தவிர்த்திருக்கிறார். ஊடகங்களின் கவனம் முழுவதும் பட்ஜெட்டில் இருக்கும் என்பதால் விஜய்யின் வருகையை கிட்டத்தட்ட மாலைக்கு நெருக்கமாக தள்ளிவைத்திருந்தது அவரது டீம்.
பட்ஜெட் வெளியானவுடன் பட்ஜெட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்பதால், பொலிட்டிக்கல் அட்வைஸ் டீம் அதற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் “மீண்டும் புறக்கணிக்கப்படுகிறது தமிழகம்’ என விஜய் தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் பதவி வழங்குவதில் தாங்கள் சாதிரீதியாக புறக்கணிப்படுகிறோம் என ஊடகங்களிடம் குமுறிக் கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மேற்கில் G.K.கதிர் என்பவருக்கு மா.செ பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு தரப்பு அதில் அதிருப்தியடைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக பணி செய்த சரண் என்பவருக்கு அந்த தரப்பு மா.செ பதவியை எதிர்பார்த்திருக்கிறது. ஆனால், அவருக்கு பொருளாளர் பதவியே வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சரணின் ஆதரவாளர்களும் புறக்கணிப்பட்டதாக புகார் சொல்கின்றனர். அலுவலகத்துக்குள் இவர்கள் பஞ்சாயத்தை கூட்ட… உஷாரான ஆனந்த் அவர்களை அலுவலகத்துக்குள் அழைத்துப் பேசினார்.
‘7 வருசமா எங்கேயோ காணாம போயிட்டு கட்சி ஆரம்பிச்ச உடனே பதவி கேட்கிறாங்க.’ என இந்த பஞ்சாயத்தில் தன் தரப்பு விளக்கத்தை ஊடகங்களுக்கு சொன்னார் ஆனந்த்.
பதவிகளுக்கு உள்ளடி வேலைகள் நடந்துகொண்டிருக்க, பதவியை பெற்றவர்கள் கட்சி அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டுவதில் மோதிக்கொண்டிருக்கின்றனர். பனையூர் அலுவலகத்தின் கேட்டின் இருபக்கத்திலும் சென்னையை சேர்ந்த மா.செக்கள் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.